மதுரை மாநாட்டில் பிரபல யூடியூபர் முக்தாரை தவெக தொண்டர்கள் விரட்டியடித்தனர். இதனால் அவர் அவரசம், அவசரமாக வெளியே சென்றார்.
தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 2 லட்சம் தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், மத்தியில் ஆளும் பாஜக, தமிழகத்தில் ஆளும் திமுக, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக என அனைத்து பெரிய கட்சிகளையும் பாரபட்சமின்றி விமர்சித்தார். மேலும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்களை எதிர்க்கும் சீமானையும் அவர் மறைமுகமாக விமர்சித்தார்.
பாஜக, திமுகவை கடுமையாக சாடிய விஜய்
மேலும் தனது பேச்சில் அவர் பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்தும், தனது கட்சியின் கொள்கைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக கூறி விஜய் திமுகவை கடுமையாக சாடினார். இது தவிர கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார். நீட் தேர்வு மத்திய அரசின் பிடிவாதத்தால் நடக்கிறது என்று விமர்சித்தார்.
முக்தாரை விரட்டியடித்த தவெக தொண்டர்கள்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்றும், மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்னதாக, தவெக மாநாடு தொடங்குவதற்கு முன்பு தவெகவினர் பிரபல யூடியூபர் முக்தாரை விரட்டியடித்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது தவெக மாநாட்டு திடலில் மாஸ்க் அணிந்த முக்தார் வந்திருந்தார்.
முக்தாருக்கு எதிராக கோஷம்
''தவெகவுக்கு எதிராக பேசும் முக்தார் வெளியேறு. யூடியூபர் முக்தார் வெளியேறு'' என்று தவெக தொண்டர் ஒருவர் கத்தி கூச்சலிட அங்கிருந்த அனைத்து தவெக தொண்டர்களும் முக்தார் வெளியேறும்படி கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து முக்தார் மாநாட்டுத் திடலில் அவசரம் அவசரமாக வெளியே சென்றார். அப்போதும் அவரை விடாமல் பின்தொடர்ந்து சென்ற தவெக தொண்டர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்களிடம், ''சார் முக்தாரை வெளியேற்றுங்கள்'' எண்று ஆவேசமாக கூறினார்கள். இதனால் மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு நிலவியது.
முக்தார் மீது விஜய் தொண்டர்களுக்கு இவ்வளவு கோபம் ஏன்?
பிரபல யூடியூபரான முக்தார், நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கியதில் இருந்து அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய் வீட்டில் இருந்து அரசியல் செய்வதாகவும், மக்களை சந்திக்கவில்லை என்று தொடர்ந்து விமர்சித்தார். இதனால் கடும் கோபம் கொண்ட தவெகவினர் அவரை விரட்டியடித்துள்ளனர். முக்தார் திமுக கட்சியின் ஆதரவாளர் என தவெகவினர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
