மதுரை மெட்ரோவில் 5 கி.மீ. சுரங்க ரயில் பாதை! விமான நிலையம் வரை பயணிக்கலாம்!
ரூ.8,500 கோடி மதிப்பிலான மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 2027ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 31 கி.மீ. வழித்தடத்தில் 5 கி.மீ. நிலத்துக்கு அடியிலும் அமைக்கப்படும்.
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மதுரை சர்வதேச விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்படும் என சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார். விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிப்பதற்கு முன்னதாக, மதுரை மெட்ரோ திட்டத்தின் பல்வேறு பங்குதாரர்களுடனான கூட்டத்தில் அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் கலான், மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் திருமன் அர்ச்சுனன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆனந்த் பத்மநாபன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, மாநில நெடுஞ்சாலைகள், போக்குவரத்து காவல் துறை, போக்குவரத்து உள்ளிட்ட 20 துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அழகர்கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஓட்டலில் இந்தக் கூட்டம் நடந்தது.
Video: சுகோய் போர் விமானத்தில் பயணித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
கூட்டத்தில் பேசிய சித்திக் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 100 ஆண்டுகால தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்படும் எனவும் திட்டமிட்டபடி பணிகள் தொடர்தால் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் எனவும் கூறினார். திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான 31 கிலோமீட்டர் தூரத்தில், 26 கிலோமீட்டர் தூரம் உயர்மட்ட மேம்பாலங்களாகவும், 5 கிலோமீட்டர் தொலைவுக்கு நிலத்துக்கு அடியிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும். மதுரை பழமையான நகரமாக இருப்பதால், அதன் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில், மீனாட்சி அம்மன் கோவில் முன்புறம் கோரிப்பாளையம் முதல் வசந்த நகர் வரையிலான பாதை வைகை ஆற்றின் கீழ் சுரங்கப்பாதையாக அமைக்கப்படும்.
“தற்போதைய நிலவரப்படி, உயர்மட்டப் பாதையில் 14 நிலையங்களும், நிலத்தடியில் நான்கு நிலையங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. மதுரை ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சி அம்மன் கோயில் ஆகியவற்றை இணைக்கும் வகையில் ஒரு நிலையம் அமைக்கப்படும். சாத்தியக்கூறு அறிக்கையில், ஒத்தக்கடை - திருமங்கலம் வழித்தடத்தைத் தவிர, விமான நிலையம் - காட்டுப்புலிநகர் மற்றும் மணலூர் - நாகமலை புதுக்கோட்டை ஆகிய மேலும் இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன" என்று சித்திக் கூறியுள்ளார்.
சென்னை - பெங்களூரு பயண நேரம் 30 நிமிடம் வரை குறைகிறது! தெற்கு ரயில்வே அதிரடி!
முதற்கட்டமாக மதுரை மெட்ரோ ரயில் ஐந்து முதல் பத்து நிமிட இடைவெளியில் மூன்று பெட்டிகளுடன் இயக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், "நிலம் இருக்கிறது என்பதற்காக குறிப்பிட்ட ஒரு இடத்தில் ரயில் நிலையத்தைக் கட்டப்படாமல், மக்களின் போக்குவரத்துத் தேவையின் அடிப்படையில் ரயில் நிலையத்தை அமைக்க வேண்டும்" என்றார்.
ரயில் நிலையங்களின் எண்ணிக்கை விரிவான திட்ட அறிக்கைக்குப் பின் இறுதி செய்யப்படும். திட்டத்தின் செலவு பற்றி பேசிய அவர், ரூ.8,500 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தலா 20 சதவீதமும் பங்களிக்கின்றன எனவும் வெளி நிதி நிறுவனங்கள் மூலம் மீதி 60 சதவீதம் பங்களிப்பு பெறப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதும் பங்குதாரர்களுடன் இன்னும் ஒரு சுற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் எனவும் சித்திக் கூறினார்.
EMI ல் மாம்பழம் வாங்கலாம்! புகழ்பெற்ற அல்போன்சா மாம்பழத்தை ருசிக்க சூப்பர் சலுகை!