சென்னை - பெங்களூரு பயண நேரம் 30 நிமிடம் வரை குறைகிறது! தெற்கு ரயில்வே அதிரடி!
சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண நேரம் வெகுவாகக் குறைய உள்ளது. மேம்படுத்தப்பட்ட தண்டவாளங்களால் கடந்த நிதியாண்டில் மட்டும் 44 ரயில்களின் வேகத்தை ரயில்வே அதிகரித்தது.
சென்னை - பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை - மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்கப்படும் சென்னை - ஜோலார்பேட்டை ரயில் போன்ற புதிய ரயில் சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதால், சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண நேரம் வெகுவாகக் குறைய உள்ளது.
இந்த ரயில்கள் மூலம் பெங்களூரு - சென்னை இடையேயான பயண நேரத்தை 30 முதல் 45 நிமிடங்கள் வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மேற்குறிப்பிட்ட ரயில்கள் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளதால் பெங்களூருக்குச் செல்லும் பிற ரயில்களின் பயண நேரமும் குறைய வாய்ப்புள்ளது.
சென்னை-கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும் சென்னை-ஜோலார்பேட்டை வழித்தடத்தை மேம்படுத்துவதால் பயண நேரம் 5.50 மணிநேரமாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்கள் வேகப்படுத்தப்படும் என்றும், பெங்களூருக்கு பயண நேரத்தை குறைக்க அதிக ரயில்கள் வேகப்படுத்தப்படும் என்றும் ரயில்வே அதிகாரி ஒருவர் சொல்கிறார்.
அதிவேக இயக்கத்திற்காக பெங்களூரு வரை தண்டவாளங்களை மேம்படுத்தும் பணியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது. பல எக்ஸ்பிரஸ் ரயில்களை அதிக வேகத்தில் இயக்குவதற்கான வழித்தடத்தை அடையாளம் கண்டு வருகிறது. இதற்கு பல்வேறு வகையான சோதனைகள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. தற்போது உள்ள ரயில் பெட்டிகள் மற்றும் இன்ஜின்கள் ஏற்கெனவே மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டவை.
மேம்படுத்தப்பட்ட தண்டவாளங்களால் கடந்த நிதியாண்டில் மட்டும் 44 ரயில்களின் வேகத்தை ரயில்வே அதிகரித்தது. கூடுதலாக, தெற்கு ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளின் லூப் லைன்களின் வேகம் கடந்த ஆண்டு மேம்படுத்தப்பட்டு, தற்போது 15 முதல் 30 கிலோமீட்டர் அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் சரக்கு சேவைகளுக்கான சில வழித்தடங்களை விடுவிக்கும் என்று கூறப்படுகிறது.
110 கிமீ மற்றும் 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் மீதமுள்ள வழித்தடங்களையும் தெற்கு ரயில்வே மேம்படுத்துகிறது. எதிர்காலத்தில் ஸ்லீப்பர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த வழித்தடத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாவும் தெற்கு ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.
WATCH: உ.பி.யில் தேசியக் கொடியை வைத்து பழங்களை சுத்தம் செய்யும் நபர்!