Video: சுகோய் போர் விமானத்தில் பயணித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராணுவ உடை அணிந்து சுகோய்-30 எம்.கே.ஐ. (Sukhoi 30 MKI) போர் விமானத்தில் பயணித்தார்.
அசாமில் மூன்று நாள் சுற்றுப் பிரயாணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுகோய் போர் விமானத்தில் பயணித்திருக்கிறார். முப்படைகளின் தலைவராக இருக்கும் குடியரசுத் தலைவர் சுகோய்-30 எம்.கே.ஐ. ரகத்தைச் சேர்ந்த போர் பயணித்தார்.
பிரம்மபுத்திரா மற்றும் தேஜ்பூர் பள்ளத்தாக்குகளை உள்ளடக்கிய பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விமானத்தில் பயணம் செய்தார். விமானத்தை கேப்டன் நவீன் குமார் ஓட்டிச் சென்றார். விமானம் கடல் மட்டத்திலிருந்து சுமார் இரண்டு கிமீ உயரத்தில் மணிக்கு சுமார் 800 கிமீ வேகத்தில் பறந்தது.
ராணுவ உடை அணிந்து தேஜ்பூர் விமானப்படை தளத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விமானியுடன் சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானத்தில் இன்று பயணம் செய்தார். இந்த சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானம் இரண்டு பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது ஆகும்.
ரஷ்யாவைச் சேர்ந்த சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானத்துக்கு இந்தியா உரிமம் பெற்றது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இதற்கு முன் 2009ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் இந்திய ராணுவத்தின் போர் விமானத்தில் பயணித்துள்ளார்.
WATCH: உ.பி.யில் தேசியக் கொடியை வைத்து பழங்களை சுத்தம் செய்யும் நபர்!
தனது சுகோய் விமானப் பயணத்தை ஏற்பாடு செய்த விமானப்படை குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளன குடியரசுத் தலைவர், "இந்திய விமானப்படையின் வலிமைமிக்க சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறப்பது எனக்கு ஒரு உற்சாகமான அனுபவமாக இருந்தது. இந்தியாவின் தற்காப்புத் திறன் நிலம், வான், கடல் என அனைத்து எல்லைகளையும் உள்ளடக்கும் வகையில் அபரிமிதமாக விரிவடைந்துள்ளது பெருமைக்குரியது" என்றும் தெரிவித்துள்ளார்.
விமானம் மற்றும் இந்திய விமானப்படையின் (IAF) செயல்பாட்டு திறன்கள் குறித்து விமானப்படை அதிகாரிகள் குடியரசுத் தலைவருக்கு விளக்கம் அளித்தனர். அப்போது இந்திய விமானப்படையின் தயார்நிலை திருப்தி அளிப்பதாக குடியரசுத் தலைவர் முர்மு குறிப்பிட்டுள்ளார்.