கோவையில் தனியாக உள்ள வீடுகளை குறிவைத்து பகலில் மட்டும் திருடும் பகல் கொள்ளையன் கைது
கோவையில் தனியாக உள்ள வீடுகளை குறி வைத்து பகல் நேரத்தில் மட்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் பகல் கொள்ளையனை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 13ம் தேதி தனது குடும்பத்தினருடன் தனது தோட்டத்திற்கு சென்ற நிலையில், இவரது மகன்கள் கல்லூரி சென்று விட்டு மாலை வீடு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருப்பதை பார்த்து உள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அந்த நபரிடம் விசாரிக்க சென்று உள்ளனர். அப்போது அவர்களது வீட்டினுள் இருந்து வெளியே வந்த மற்றொரு நபர், அங்கு தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி இருவரும் தப்பி ஓடி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 2.50 லட்சம் ரூபாய் பணம், 3 பவுன் தங்க நகைகள், மடிக் கணினி ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்து சுப்பிரமணியன் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அன்னூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சத்தியமங்கலம் சாலையில் பசூர் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் இருப்பதை பார்த்த தனிப்படை காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மக்களை தூண்டிவிட்டே ஸ்டெர்லைட் ஆலையை மூடினர் - ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு
விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவரது பெயர் முபாரக் அலி என்பதும், இவர் தனது நண்பர் சுபாஷ் என்பவருடன் இணைந்து சுப்பிரமணியன் வீட்டில் கொள்ளை அடித்ததும் தெரியவந்தது.
குளத்தில் குளிக்கச் சென்ற தற்காப்பு கலை ஆசிரியர் நீரில் மூழ்கி பலி
மேலும் இதே போன்று கோவை திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முபாரக் அலி மீது 30 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளதும், தனியாக உள்ள வீடுகளை குறி வைத்து பகல் நேரங்களில் மட்டுமே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து முபாரக் அலியை அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.