மக்களை தூண்டிவிட்டே ஸ்டெர்லைட் ஆலையை மூடினர் - ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியை பயன்படுத்தி மக்களை தூண்டிவிட்டு வேண்டுமென்றே மூட வைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் இன்று கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையானது நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.
நாட்டின் வளர்ச்சிக்கு காப்பர் எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் நாட்டின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துள்ளனர். ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமான ஒன்று.
திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க்; 10 ஆயிரம் பேருக்கு வேலை - அமைச்சர் அறிவிப்பு
மேலும் கேரளாவின் விளிஞ்சியம் துறைமுகத்திற்கு எதிராகவும், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகவும் வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது நாட்டிற்கும், தமிழகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுசூழல், மனித உரிமை என்ற பெயரில் வெளிநாட்டு நிதி பெறப்பட்டு போராட்டம் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.