கோவையில் தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து காலை 8 மணி முதலே 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
உதகையில் கோலாகலமாகத் தொடங்கிய மலர் கண்காட்சி
இதனையடுத்து காலை 10 மணி அளவில் மாநகராட்சி மேயர் கல்பனா மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. பேச்சுவார்த்தைக்கு போராட்டத்தில் ஈடுபடாத தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.இதனையடு்த்தெ நேற்றைய தினம் பேச்சு வார்த்தையில் பங்கேற்ற தூய்மை பணியாளர் சங்கத்தினரை மட்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக்கூறி அதிகாரிகள் சமரசம் செய்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை துவங்கியது.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து தூய்மை பணியாளர்கள் மத்தியில் பேசிய நிர்வாகிகள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் படி கேட்டுக் கொண்டனர். பின்னர் பேசிய கோவை மாவட்ட தூய்மை பணியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், கோவை மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலியை வழங்க கோரி போராட்டம் நடத்தினோம். இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.
கொடநாடு கொலை வழக்கு ...! குற்றவாளி யார்..? சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
இன்று மேயர், ஆணையாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது எனவும், 18 கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவித்தார். குறைந்த பட்ச கூலி தொடர்பாக விரைவில் மாமன்ற கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்புவதாக தெரிவித்து இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், இதனையடுத்து மேயர் , ஆணையர் ஆகியோரின் வாக்குறுதியை ஏற்று போராட்டம் கைவிடப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
அரசின் சார்பில் வரும் 8ம் தேதி அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து இது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் எனவும் பேச்சுவார்த்தையில் தெரிவிக்கபபட்டு இருப்பதாகவும், அதிகாரிகளின் வாக்குறுதியை ஏற்று மாநகராட்சி பகுதியில் மட்டும் தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார். அதே வேளையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் போராட்டம் தொடர்கிறது என தெரிவித்த அவர், மாவட்ட ஆட்சியருடன் நகராட்சி,பேரூராட்சி, ஊராட்சிகளில் குறைந்த பட்ச கூலி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது.