நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீசிய நபரை துணிச்சலாக விரட்டி பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனது மனைவி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற நபரை துணிவுடன் விரட்டி பிடித்த பெண் காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வழக்கம் போல் இன்றும் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் மீது அவரது கணவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார். யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தால் அப்பகுதியில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
இதனை பயன்படுத்தி குற்றவாளி அவ்விடத்திலிருந்து தப்பி ஓடெ முயற்சி செய்தார். அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் இந்துமதி விரைவாக செயல்பட்டு குற்றவாளியை மடக்கிப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து சுற்றி நின்று கொண்டிருந்த வழக்கறிஞர்கள் பெண் காவலருக்கு உதவியாக குற்றவாளியை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Breaking: கோவையில் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு; பொதுமக்கள் அலறல்
ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், குற்றவாளியை விரைந்து பிடித்த பெண் காவலர் இந்துமதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் அவரை ஊக்குவிக்கும் விதமாக ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
கள்ளக்காதலியின் பேச்சைக் கேட்டு 5 ஆண்டுகளாக கொடுமை; காவலர் மீது பெண் பரபரப்பு புகார்