Asianet News TamilAsianet News Tamil

ஆதியோகி சிலைக்கான அனுமதி: ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய ஈஷா!

“கோவை மாவட்ட ஆட்சியரின் அனுமதி உட்பட தேவையான சட்ட அனுமதிகளை பெற்றே ஆதியோகி சிவன் சிலையை கட்டியுள்ளோம்” என ஈஷா யோக மைய நிர்வாகி  தினேஷ் ராஜா அவர்கள் ஆதாரங்களை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

Permission for Adiyogi statue: Isha releasing evidence!
Author
First Published Sep 2, 2023, 2:55 PM IST

ஈஷாவுக்கு எதிரான பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிப்பதற்காக ஈஷா சார்பில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (செப்.2) நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற ஈஷா யோக மையத்தின் நிர்வாகி திரு. தினேஷ் ராஜா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவையின் மிக முக்கிய ஆன்மீக அடையாளமாக விளங்கும் ஆதியோகி சிவன் சிலை கடந்த 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பொதுவாக, இதுபோன்ற சிலைகளை நிறுவுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். அந்த வகையில், ஆதியோகி சிலை அமைப்பதற்கு அனுமதி கோரி நாங்கள் 2016-ம் ஆண்டே விண்ணப்பித்துவிட்டோம். 

எங்களின் விண்ணப்பத்தை ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறைகளின் ஆய்வு அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் சிலை அமைப்பதற்கு 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆதியோகி சிலை திறப்பை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்ற தவறான உள்நோக்கத்துடன் ஒரு அமைப்பு உயர்நீதிமன்றத்தில் ஈஷாவிற்கு எதிராக 2017-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கும் கடந்த மாதம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

எனவே, எவ்வித அனுமதியும் இன்றி ஆதியோகி சிலை கட்டுப்பட்டுள்ளது என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது. அதுமட்டுமில்லாமல், இந்த விஷயத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ஆதியோகி என்பது ஒரு சிலை; அது கட்டிடம் அல்ல. சிலை வைப்பதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் தான் உள்ளது. DTCP-யின் அனுமதி வரம்பிற்குள் இது வராது. எனவே தான், DTCP தங்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை என நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது. 

இதை நாங்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளிடமும் எடுத்துரைத்துவிட்டோம். அதனால் தான் இந்த வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்கு செல்லாமல் நிறைவு பெற்றுள்ளது. அத்துடன், உயர்நீதிமன்ற உத்தரவின் படி, எங்களிடம் உள்ள ஆவணங்களை நகரமைப்பு திட்டமிடல் துறையிடம் சமர்ப்பித்துவிட்டோம்” என்றார்.

மலைவாழ் மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கர் நிலத்தை ஈஷா ஆக்கிரமித்துள்ளதாக பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் போது, “ஈஷா யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. அவர்கள் குறிப்பிடும் 44 ஏக்கர் நிலம் ஈஷாவின் பெயரில் இருப்பதை நிரூபித்தால் இப்போதே அதை திருப்பி கொடுக்க தயாராக உள்ளோம். இது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலில் அந்த 44 ஏக்கரில் ஈஷா எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்பது தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

யானை வழித்தடம் மற்றும் யானை வாழ்விடத்தை ஆக்கிரமித்து ஈஷாவின் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்கும் போது, ஈஷா யானை வழித்தடத்தில் இல்லை என்பதை நிரூபிக்கும் 5 வெவ்வேறு ஆதாரங்களை அவர் முன் வைத்தார். 

தமிழக வனத்துறையின் RTI தகவல், தமிழக வனத் துறை அமைத்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அறிக்கை, இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் (WWF) அறிக்கை மற்றும் இந்திய வனவிலங்கு அறக்கட்டளையின் (WTI) ஆய்வு அறிக்கைகள் முறையே 2005 & 2017 ஆகிய அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட வேண்டிய யானை வழித்தடங்கள் குறித்தான ஆய்வு அறிக்கைகள் எதிலும் ஈஷா மையம் அமைந்துள்ள பகுதி வரவில்லை என்று ஆணித்தரமாக கூறினார்.

இதுதவிர, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி, வனத்தை அழித்து ஆதியோகி சிலை கட்டப்பட்டதாக கூறப்படும் பொய் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்ற வெற்று அவதூறுகள் என்பதை நிரூபிக்கும் விதமாக அதற்குரிய ஆவணங்களையும், ஆதாரங்களையும் அவர் செய்தியாளர்களிடம் வழங்கினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios