கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். கோவை நகரின் மையப் பகுதியில் முக்கியமான பேருந்து நிலையங்களில் நகரப் பேருந்து நிலையமும் ஒன்று. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

பெண் காவலர்கள் குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்த சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் பாதுகாப்போடு திருச்சி அழைத்து வரப்பட்டார்

இந்த நிலையில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திற்குள் வந்த நிலையில், வாகனத்தை பின்னோக்கி இயக்கியதில் இரண்டு பேருந்திற்கு நடுவில் சிக்கி பேருந்திற்கு காத்து இருந்த பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சக பயனிகள் கூச்சலிட்டு அலறி அடித்து ஓடினார்கள். 

உடனடியாக அங்கு இருந்த சக பேருந்து ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி ஓட்டுனரை கீழே இறக்கியதில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டுனரை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த திருநாவுக்கரசு, என்றும் விபத்தில் பலியானவர் சிவக்குமார் என்பதும் தெரியவந்து உள்ளது.