Asianet News TamilAsianet News Tamil

கர்நாடகாவில் இருந்து பாஜக துடைத்தெறியப்பட்டுள்ளதாக முதல்வர் கனவு காண்கிறார் - வானதி சீனிவாசன் கருத்து

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை தனது சிறப்பான பங்களிப்பை அளித்த நிலையிலும், காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் தோல்வி குறித்து கட்சி மேலிடம் ஆராயும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

mla vanathi srinivasan comments about karnataka assembly election in coimbatore
Author
First Published May 15, 2023, 10:11 AM IST

கோவை காந்திபுரம் 2-வது வீதி விரிவுப்பகுதியில் தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு அங்கன்வாடி மையம் கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், 'கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் சிறப்பானதாகவும் தூய்மையானதாகவும் மாற்ற  பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பல இடங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டிட வசதி மோசமாக உள்ளதால் அங்கன்வாடி மையங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அங்கன்வாடி மையங்களுக்கு அரசு அதிக கவனம் கொடுத்து, குறிப்பாக கர்ப்பிணிகள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் வரும் இடம் என்பதால் நல்ல சூழலை இங்கு உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதாக' கூறினார்.

தொடர்ந்து கர்நாடக தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தவர், 'கர்நாடக தேர்தலில் மக்கள் கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுடைய ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கான காரணங்களை நிச்சயமாக கட்சி ஆராயும். மக்களுடைய நம்பிக்கை பெறக்கூடிய வகையில் செயல் திட்டங்களை நிச்சயம் உருவாக்கும்.

கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்; பெண் பலி, 21 பேர் காயம்

வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்புகளை பூரணமாக நிறைவேற்றுகின்ற வகையிலும், மக்களுடன் நெருக்கமான அணுகுமுறையையும் ஏற்படுத்த, கர்நாடக தேர்தல் முடிவு எங்களை தயார்படுத்தக்கூடிய விஷயமாக பார்க்கிறோம். தோல்விக்கு ஒரு குறிப்பிட்ட காரணம் என எந்த கட்சியாலும் சொல்ல முடியாது. பல்வேறு காரணங்கள் இருக்கலாம்' என பதிலளித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், முதலமைச்சர் ஒரு கனவு கண்டு கொண்டிருக்கிறார். ஒருமுறை தேர்தலில் ஒரு கட்சி தோல்வி அடைந்துவிட்டால் அந்த மாநிலத்திலிருந்து கட்சி துடைத்தெரியப்படும் என்றால் திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டில் இருந்து எத்தனை முறை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் யோசிக்க வேண்டும். இப்போதும் கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக இருக்க பாஜகவிற்கு தான் மக்கள் வாய்ப்பளித்திருக்கின்றனர். அதனால் திராவிட நிலப்பரப்பு என்பது இவரை தவிர மற்ற மாநிலத்தில் உள்ள முதல்வர்களே ஒத்துக்கொள்ளாதபோது இதை ஒரு அலங்கார வார்த்தை என மட்டுமே கருத முடியும்.

காங்கிரஸ் ஏன் எல்லா மாநிலங்களிலும் தோற்றது என்பதை ஆராய்ந்து அவர்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும். தேர்தல் என்றால் வெற்றி, தோல்வி என்பது அரசியல் கட்சிக்கு சாதாரணம். கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜகவை சுத்தமாக புறக்கணித்து விட்டார்கள் என சொல்ல முடியாது. பாஜகவின் ஆதரவு வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. தோல்விக்கான விஷயங்களை ஆராய்ந்து மீண்டும் மக்களின் ஆதரவை கண்டிப்பாக பெறுவோம் என தெரிவித்தார்.

பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி தோல்வி அடைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், தொகுதியில் கிடைக்கும் வெற்றி தோல்வியை மட்டுமே வைத்து ஒருவரின் தேர்தல் அணுகுமுறையை அளவிட முடியாது. கட்சிக்கு அவர்கள் ஆற்றி இருக்கக்கூடிய பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிறந்த தலைவர்களாக இருந்தாலும் தேர்தல் களத்தில் அவர்கள் தோற்று இருப்பார்கள். அதற்காக அவர்கள் தேர்தலில் வழிநடத்தக் கூடாது என்பது என ஒன்றும் இல்லை. தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து; பிரபல ரௌடி கைகள் சிதைந்து மருத்துவமனையில் அனுமதி

அண்ணாமலை அவர்கள் அவரது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். இருந்தும் மக்கள் காங்கிரசிற்கு வாய்ப்பு அளித்துள்ளனர். எனவே அவருடைய சொந்த பங்களிப்பு தனிப்பட்ட பங்களிப்பு என இதில் எதையும் பார்க்க முடியாது. இதை ஒட்டுமொத்த கட்சிக்கான பங்களிப்பு என்று தான் பார்க்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக தேர்தல் தோல்வி எந்த விதத்திலும் எங்களுக்கு பிரச்சனையாக இருக்காது. கடந்த முறை ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அடுத்த 6 மாத காலங்களில் வந்த தேர்தலில் பாஜக அங்கு வெற்றி பெற்றது. எனவே, மத்தியில் நல்ல அரசாங்கத்தை, நேர்மையான அரசாங்கத்தை கொடுத்து உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவிற்கு கிடைத்திருக்கக்கூடிய முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வகையில், மீண்டும் பாஜகவிற்கு தான் மக்கள் வாய்ப்பளிப்பார்கள்.

பிரதமர் மோடிக்கு எதிராகவோ அல்லது சமமாகவே இன்னொரு பிரதமர் என்பது வரக்கூடிய காலத்தில் இல்லை. எனவே பாரதிய ஜனதா கட்சி அடுத்த முறை ஆட்சி அமைப்பது 100 சதவீதம் உறுதி. மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு பாஜகவிற்கு கட்டாயம் மக்கள் ஆதரவளிப்பார்கள்.' என்று கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios