Drugs: கல்லூரி இளைஞர்கள் தான் டார்கெட்; கென்யா போதை பொருள் கடத்தல் கும்பலை பொறி வைத்து பிடித்த கோவை போலீஸ்
கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயர்ரக போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கோவை தனிப்படை காவல் துறையினர் கென்யாவைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலை கைது செய்து அதிரடி காட்டி உள்ளனர்.
கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வசதி படைத்த இளைஞர்களை குறிவைத்து மெத்தபேட்டமைன் என்ற உயர்ரக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கோவை மாநகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது கோவை பன்னிமடை அருகே கடந்த மாதம் 17ம் தேதி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உயர் ரக போதைப் பொருளான மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் 102 கிராம் மற்றும் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞர்கள் கவுதம், அபிமன்யு, பாசில், முகமது அர்சித், இஜாஸ், பெர்வின் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அந்த இளைஞர்களுக்கு கோவையை சேர்ந்த வினோத் என்பவரும், அவரது நண்பர்களும் போதை மருந்தை விநியோகம் செய்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து ஒரு வார தேடுதல் வேட்டைக்கு பின்பு தலைமறைவாக இருந்த இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளரான பிரவீன் என்பவர் போதைப்பொருள் விநியோகம் செய்தது தெரிய வந்தது. பெங்களூரில் வாடகை கார் ஓட்டுனராக பிரவீன் பணிபுரிந்து வந்த நிலையில், பிரவீனை கோவை காவல் துறையினர் பெங்களூரில் கைது செய்தனர்.
பிரவீனிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு சக கால் டாக்ஸி ஓட்டுனர் மூலம் போதை பொருள் விதியோகம் செய்பவர்களின் வாட்ஸ் அப் எண் கிடைத்ததாகவும், அந்த வாட்ஸ் அப் குழுவில் பணப்பரிவர்த்தனை செய்வதன் மூலம் உயர் ரக போதை பொருள் வாங்க முடியும் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கோவை மாநகர போலீசார், கைது செய்யப்பட்ட பிரவீன் மூலமாக மெத்தப்பேட்டமைன் போதை பொருளை வாட்ஸ் அப் எண்ணில் ஆர்டர் செய்தனர். அதற்கு விலையாக 15 ஆயிரம் ரூபாய் செலுத்தபட்டது.
இதனைத் தொடர்ந்து யுபிஐயுடன் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் குறித்து கோவை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த செல்போன் எண் டெல்லியில் படித்து முடித்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த இமான் தலேம்வா என்பவருடையது என்பது தெரியவந்தது. இவான் தலேம்வா படிப்பு முடித்து உகாண்டா திரும்பிய நிலையில், அவரது வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டை கென்யா நாட்டைச் சேர்ந்த ஐவி போனுங்கே என்பவர் பயன்படுத்தி வருவதும், இவர் பெங்களூரில் தங்கி சட்டம் படித்து வரும் மாணவி என்பதும் தெரிய வந்தது.
அந்த வங்கி கணக்கினை போதைப் பொருள் விநியோகத்திற்கு பணத்தை பெறுவதற்கு மட்டும் பயன்படுத்தி வந்துள்ளதும், டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை 45 லட்ச ரூபாய் வரை அந்த கணக்கில் பணப்பரிவத்தனை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து கென்யா நாட்டினை சேர்ந்த ஐவி போனங்கேவின் இருப்பிடத்தை கண்டறிந்த கோவை தனிப்படை போலீஸ் குழுவினர் அவரை கண்காணித்தனர்.
கென்யாவை சேர்ந்த ஐவி போனுஙகே பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறைக்கு அடிக்கடி சென்று வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற போலீசார் அந்த கென்யா நாட்டு பெண்ணின் புகைப்படம் மற்றும் விவரங்களை சேகரித்தனர். இந்நிலையில் பெங்களூர் லூலூ மாலில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த கென்யா பெண் ஐவி போனுஙகேவை கோவை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது உகாண்டா நாட்டு சேர்ந்த அவரது காதலன் ஏவியன் போங்கே என்பவரை சிறையில் சென்று பார்த்ததும், சிறையில் இருந்த படி ஏவியன் போங்கே மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்து வந்திருப்பதும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அவர் இரண்டு செல்போன்களை பயன்படுத்தி வந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. யுபிஐ மூலம் பணம் கணக்கில் வந்தவுடன் ஏதாவது ஒரு பொது இடத்தில் போதை பொருளை விநியோகம் செய்வதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் வினோத், பிரவீன் மற்றும் கென்யாவை சேர்ந்த பெண் ஐவி போனுஙகே ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தனிப்படை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் போதை பொருள் கடத்தல் தலைவன், உகாண்டா நாட்டை சேர்ந்த ஏவியன் போனுங்கே குறித்தும் அவர் பயன்படுத்தும் செல்போன்கள் குறித்தும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ள தனிப்படை போலீசார், சிறையில் இருக்கும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பெங்களூரு மத்திய சிறையில் இருக்கும் ஏவியன் போங்கேவினை கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டால்தான் சர்வதேச அளவில் உள்ள போதை பொருள் குழுவினரின் தொடர்புகளை கண்டறிய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட வினோத், பிரவீன் ஆகியோர் கோவை சிறையிலும், கென்யாவைச் சேர்ந்த பெண் ஐவி போனங்கே சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை தனிப்படை போலீசார் இது குறித்து தொடர் விசாரணை கொண்டு வருகின்றனர். மெத்தபேட்டமைன் என்ற உயர்ரக போதை பொருள் விநியோகத்தில் நூல் பிடித்தது போல அடுத்தடுத்து பின்னணியில் உள்ள குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடிச் சென்று கைது செய்துள்ளனர். தற்பொழுது இதன் சர்வதேச தொடர்புகளையும் கோவை போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடதக்கது.