அதிமுக நகர இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு கந்துவட்டி கேட்டு பெண்ணை மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் கந்துவட்டி மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் ஏ காலனியில் வசித்து வருவார் தீபா. இவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பாக முத்துகவுண்டன் லேஅவுட் சேர்ந்த அதிமுக நகர இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதற்காக மாதம் ரூ.10,000 கந்துவட்டி தரவேண்டுமென தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 3 மாதங்களாக சரியாக வட்டி கட்டி உள்ளார். குடும்ப சூழல் காரணமாக இந்த மாதம் வட்டி பணம் தர முடியாததால் செந்தில்குமார் தீபாவை தொடர்பு கொண்டு தொலைபேசியில் தகாத வார்த்தைகள் திட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பணத்தை திருப்பி கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் தீபா கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து போலீசார் அவர் மீது கந்து வட்டி மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர் கந்துவட்டி புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிகரித்தது. இதில், தினசரி வட்டி, மணி நேரம் வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி ஆகிய ஐந்து வகையான வட்டிகள் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.