கோவையில் கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வந்த மக்னா யானை பிடிபட்டது

கோவை நகர் பகுதிக்குள் சுற்றித்திரிந்த மக்னா காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானையின் உதவியுடன் பிடிக்கப்பட்டது. பிடிபட்ட யானையை மரஹடா பகுதியில் விடுவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

forest elephant makhna captured by forest officers in coimbatore

தருமபுரி மாவட்டத்தில் சுற்றித் திரிந்த மக்னா காட்டு யானை கும்கி யானையின் உதவியுடன் பிடிக்கப்பட்டு கோவை டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. வனப்பகுதியில் விடப்பட்ட யானை சில நாட்களிலேயே மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தது. குடியிருப்பு பகுதிகளில் வழி தெரியாமல் சுற்றித் திரிந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினரும், மாவட்ட காவல் அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

இருப்பினும் முறையான திட்டமிடலும், காட்டு யானையை பார்க்கவேண்டும் என்ற மனிதர்களின் ஆர்வத்தாலும் செய்வதறியாது வனத்துறையினர் விழி பிதுங்கி நின்றனர். செய்வதறியாது திகைத்த காட்டு யானையோ மனம் போன போக்கில் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி வந்தது.

forest elephant makhna captured by forest officers in coimbatore

பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களை கடந்து, கிணத்துக்கடவு வழியாக மதுக்கரை பகுதியை நோக்கி யானை நடந்து வந்தது. மக்னா யானையை விரட்ட வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இதையடுத்து சுமார் 140 கி.மீ. தூரத்திற்கும் மேலாக நடந்து பல்வேறு கிராமங்களை கடந்து கோவை மாநகரப் பகுதியை மக்னா யானை அடைந்தது. குனியமுத்தூர் அருகேயுள்ள செந்தமிழ் நகர், அறிவொளி நகர், பி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் யானை சுற்றித் திரிந்தது. குரும்பபாளையம் பகுதியில் எதிரே வந்த ஒருவரை யானை தும்பிக்கையில் தள்ளி விட்டு சென்றது.

இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை நேரத்தில் யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், யானை பி.கே.புதூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. வீடுகள் நிறைந்த தெருக்களில் உலா வந்த யானை, அப்பகுதியில் இருந்த சுடுகாட்டின் மதில் சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது. 

சுற்றுவட்டார பகுதி மக்கள் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மக்னா யானை செல்வபுரம் அருகேயுள்ள புட்டுவிக்கி பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தெலுங்குபாளையம் பிரிவு, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது. பின்னர் நொய்யல் ஆற்றுக்கு அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் மக்னா யானை நின்று கொண்டிருந்தது. இந்த யானையை பிடிக்க டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று மதியம் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணிகளை வனத்துறையினர் துவங்கினர். ஓரிரு முறை மருத்துவர்கள் செலுத்திய மயக்க ஊசி குறி தவறி சென்றது. முட்புதர் பகுதியில் சுற்றிய மக்னா யானை வாழைத்தோட்டத்திற்குள் சென்றது. அப்போது மருத்துவர் பிரகாஷ் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். 

தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2வது இடம் - ஸ்டாலின் பெருமிதம்

இதையடுத்து மயக்க நிலையில் உள்ள யானையை கும்கி யானை உதவியுடன் பிடித்து, தெங்குமரஹடா வனப்பகுதியில் விடுவிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios