கோவை - கோவா இடையே விமான சேவை மீண்டும் தொடக்கம்!
கோவை விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கோவா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது
கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனிடையே, கோவையில் இருந்து கோவா மற்றும் கோவையிலிருந்து ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த விமான சேவை கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கோவா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை விமான நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: “கோவை விமான நிலையத்தில் தற்போது தினமும் சராசரியாக 23 முதல் 28 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. கோவை-கோவா மற்றும் கோவை-ஐதராபாத் இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சேவை தற்பொழுது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து கோவை - கோவா இடையே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்தில் நான்கு நாட்கள் இந்த சேவை வழங்கப்படுகிறது. கோவாவில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் விமானம் கோவைக்கு 11 மணிக்கு வந்தடையும். அதேபோல் கோவையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 1 மணிக்கு கோவா சென்றடையும்.” என்றனர்.
கேட்ட சீட்டு கிடைக்காவிட்டாலும் திமுக உடனான கூட்டணி தொடரும் - துரை வைகோ
அதேபோல் கோவையில் இருந்து ஹைதராபாத் இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சேவை பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாகவும் கோவை விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.