கோவையில் பிரபல உணவக உரிமையாளரின் சொகுசு கார், டாக்ஸி மீது மோதிய சிறிய விபத்தில், டாக்ஸி ஓட்டுநர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், அதிகார தோரணையில் தாக்கியதாக ஓட்டுநர் கார்த்திக் வேதனை தெரிவித்துள்ளார்.
கோவையில் விபத்து நேரிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விட்டு வசதி படைத்தவர்கள் தங்களது அதிகார தோரணையில் ஏழை எளியோரை தாக்கும் சம்பவம் அரங்கேறுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாநகரில் பல கிளைகளைக் கொண்டு உள்ள பிரபல உணவகமான ஹரி பவன் உரிமையாளருக்கு சொந்தமான BMW சொகுசு கார் என்று கூறப்படுகிறது. இந்த கார் இன்று காலை 11:30 மணி அளவில் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பின்னால் ரெட் டாக்ஸி கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது.
முன்னாள் சென்ற சொகுசு கார் எதிர்பாராத விதமாக சாலையில் நின்றது. பின்னால் வந்த ரெட் டாக்ஸி ஓட்டுனர் கார்த்திக் பிரேக் பிடித்தும் கார் லேசாக சொகுசு காரின் பின்புறம் மோதி உள்ளது. இது ஒரு சிறிய விபத்தாக இருந்தாலும் சொகுசு காரில் இருந்து இறங்கி வந்த நபர் டாக்ஸி ஓட்டுநர் கார்த்திக்கை பார்த்து பின்னாடியே தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமின்றி அவரை தாக்கி உள்ளார்.
விபத்து ஏற்பட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்து சட்டப்படி தீர்வு காணாமல் வசதி படைத்தவர்கள் என்பதாக தெரியாமல் இடித்ததற்காக இவ்வளவு கேவலமாக பேசி தாக்குவதா? என ஓட்டுனர் கார்த்திக் வேதனை அடைந்து தனது காரில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.
இது போன்ற சம்பவங்களால் சமூகத்தில் தேவையற்ற அசம்பாவிதங்களுக்கு வழிவகுக்கும், இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


