கோவை நரசீபுரம் அணைக்கட்டில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கோவை நரசீபுரம் பகுதியில் அணைக்கட்டில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது 12 அடி ஆழமுள்ள பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
கோவை நரசீபுரம் பகுதியில் அணைக்கட்டில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் முருகநாதன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் புகழேந்தி வேளாங்கண்ணி நகர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். முருகநாதன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பத்து பேர் புத்தாண்டு கொண்டாட ஈஷா யோகா மையத்துக்குச் சென்றனர்.
ஒரே நாளில் ரூ.97 லட்சம் டிப்ஸ் கிடைச்சுருக்கு! ஜொமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் தகவல்
அப்பொழுது அனைவரும் நரசீபுரம் சாலையில் உள்ள புதுக்காட்டு வாய்க்கால் அணைக்கட்டில் குளிக்கச் சென்றுள்ளனர். புகழேந்தி அணைக்கட்டில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது 12 அடி ஆழமுள்ள பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்க முயன்றும் முயற்சி பலன் கொடுக்கவில்லை.
இது பற்றி ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினர் அணைக்கட்டில் மூழ்கிய சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கினர். அவர்கள் சிறிது நேரத்தில் சிறுவனை சடலமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து ஆலாந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தென்மாவட்ட தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்