Coimbatore News: கோவை அன்னூரில் சாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோருக்கு கிடைத்த இழப்பீட்டுத் தொகையில், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரைப் பயன்படுத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய பாஜக கோவை மாவட்டச் செயலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதி. இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜூன் மாதம் இழப்பீடு தொகை கிடைத்துள்ளது. இவர்களுக்கு சட்ட உதவி செய்த அதே பகுதியை சேர்ந்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் 10 லட்ச ரூபாய் வழக்கு செலவிற்காக வாங்கியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பாஜகவை சேர்ந்த இந்த 3 பேரும் மேலும் ஒரு 10 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாகவும், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை பயன்படுத்தியது மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் நாகமணி தம்பதியின் இளைய மகனான ஐடி ஊழியர் அருணாச்சலம் வீடியோ ஒன்றை சமூகவலை தளங்களில் வெளியிட்டார்.

அதில் பாஜகவை சேர்த்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி முதலில் 10 லட்சம் ரூபாய் கட்டாயப்படுத்தி வாங்கிக்கொண்டனர். தற்போது மீண்டும் தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும் என அண்ணாமலை பெயரை பயன்படுத்தி மிரட்டுவதாகவும், தரவில்லை என்றால் உங்கள் அண்ணன் சென்ற இடத்திற்கே உங்களையும் அனுப்பி வைப்பதாக மிரட்டியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் வைரலானது. இது தொடர்பாக நாகராஜ் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்தார்.

இந்நிலையில் கோவை மாவட்டம் அன்னூரில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் தனது பெயரை பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனது உதவியாளர் மூலம் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்நிலையில் அண்ணாமலை பெயரை பயன்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி நிவாரணம் பெற்றவரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய பாஜக கோவை வடக்க மாவட்டச் செயலாளர் சாமிநாதன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.