கோவையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நில மோசடியில் ஈடுபட்டதால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

Coimbatore Real Estate Company Involved In Land Scam: கோவை பேரூர் பகுதியில் 'சோமு பார்ம்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வாங்கப்பட்ட நிலங்கள் மோசடியாக உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். இந்த நிலங்களை கடந்த 2012-ஆம் ஆண்டில் சோமு'ஸ் ப்ராப்பர்ட்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் சோமுசுந்தரம் என்பவரிடம் இருந்து வாங்கியதாகக் கூறும் சுமார் 90 பேர், தற்போது தங்கள் உரிமைகளை இழக்கக் கூடிய அபாயத்தில் உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவையில் நில மோசடி

சோமுஸ் பார்ம்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் சார்பில் ஸ்ரீநிவாசன் மற்றும் செல்வம் ஆகியோர் கொடுத்து உள்ள புகாரில் நிலங்கள் வாங்கும் முன் வழங்கப்பட்ட அனைத்து சட்ட ஆவணங்களும் வழக்கறிஞர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும், விற்பனை நேரத்தில் எந்த விதமான வழக்குகள், வில்லங்கங்கள் இருப்பதாக தெரியவில்லை எனவும் கூறப்பட்டு உள்ளது.ஆனால் சமீபத்தில், நீதிமன்றத்தில் இருந்து வந்த நோட்டீஸ் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

நிதி சம்பந்தமான சிக்கல்கள்

அதில், அவர்களது நிலங்கள் அனைத்தும் 2025 ஜூன் 18-ஆம் தேதி ஏலத்திற்கு வர உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், அவர்கள் நில உரிமையை இழக்கக் கூடிய அபாயம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த பிரச்சனை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நிலங்களை விற்ற சோமுசுந்தரத்திற்கும் பவானி சங்கர் என்பவருக்கும் இடையே நிதி சம்பந்தமான சிக்கல்கள் இருப்பது தெரியவந்து உள்ளது.

90 பேர் போலீசில் புகார்

இந்த விவகாரங்களை நிலங்களை விற்பனை செய்யும் போது மறைத்து விற்றதால், நில உரிமையாளர்கள் தங்களை மோசடிக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளனர். இந்த நிலையில், சோமுசுந்தரத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தாங்கள் வாங்கிய நிலங்களை பாதுகாத்து தர கோரி, பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்து உள்ளனர். ரியல் எஸ்டேட்டில் நம்பி வாங்கிய நிலத்தில் மோசடியாக விற்பனை செய்து அதில் 90 பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.