கோவையில் கோடிக்கணக்கில் கள்ள ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Coimbatore Youth Arrested For Counterfeit Currency Notes: கோவை - திருப்பூர் மாவட்ட எல்லையில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக சந்தேகப்படும்படியாக பையுடன் வந்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தன.
கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் சிக்கின
ஆனால் கள்ள ரூபாய் நோட்டுக்கள் ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்டு இருந்தது. கள்ள ரூபாய் நோட்டுகளின் இடையில் வெற்று தாள்கள் சொர்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தர்மபுரியை சேர்ந்த இளவரசன் என்பதும், அவர் கருமத்தம்பட்டி சாரதா மில் சாலை அருகே ஒரு வீட்டில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது.
இளைஞர் கைது
இதன்பிறகு அவருடைய வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அங்கும் கட்டு, கட்டாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதில் 13 பண்டல்கள் 2,000 ரூபாய் நோட்டுகள் 5 பண்டல்கள் 5,00 ரூபாய் நோட்டுகள் மற்றும் வெட்டப்படாத 2,000 ரூபாய் நோட்டுக்கள் 12 பண்டல்களும், வெட்டப்படாத 5,00 ரூபாய் நோட்டு பண்டல்கள் 13 இருந்தன. அவற்றையும் அதிநவீன பிரிண்டர்கள் செல்போன்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
50 ஆயிரம் கொடுத்தால் 2 லட்சம் கிடைக்கும்
மொத்தம் இரண்டு கோடி ரூபாய் என மதிப்பிடத்தக்க அளவுக்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. கைது செய்யப்பட்ட இளவரசனும் அவருடைய கும்பலும் சேர்ந்து ரூபாய் 50 ஆயிரம் அசல் ரூபாய் நோட்டு கொடுத்தால், ரூபாய் 2 லட்சம் மதிப்பு உள்ள கள்ள நோட்டுக்கள் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
இரட்டிப்பு பணம் தருவதாக, கூறி ஒரு பக்கமாக மட்டும் ரூபாய் நோட்டு வடிவில் அச்சடித்து மோசடி செய்ய முயன்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அய்யம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் முத்துக்குமாரிடம் மோசடி செய்ய முயன்றபோது தான் இளவரசன் காவல் துறையிடம் சிக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் இளவரசனுக்கு உடைந்தையாக இருந்த உதயகுமார், தயா என்ற குமரேசன், லோகநாதன் செந்தில் ஆகிய 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
