சாலையில் நடந்து சென்ற முதியவர் கிரேன் மோதி பலி; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
கோவையில் சாலையில் நடந்து சென்றவர் மீது கிரேன் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் முதியவர் மீது கிரேன் மோதி விபத்தை ஏற்படுத்தும் சிசடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மருதாச்சலம் (வயது 70). இவர் சிங்காநல்லூர், வெள்ளலூர் போன்ற பகுதிகளில் ஆடு மேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இவர் சிங்காநல்லூர் வெள்ளலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வேல்முருகன் என்பவர் ஓட்டி வந்த கிரேன், சாலையிலிருந்து திரும்பும் பொழுது முன்னால் நடந்து சென்ற முதியவரின் மேல் மோதியது.
கிரேன் மோதியதில் நிலை குழைந்து கீழே விழுந்த முதியவர் மருதாச்சலத்தின் மீது அந்த வாகனத்தின் பின் சக்கரம் ஏறியது. இதில் மருதாச்சலம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு கிரேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுவிட்டார். இது குறித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாக உள்ள கிரேன் ஓட்டுநர் வேல்முருகனை தேடி வருகின்றனர். இதனிடையே கிரேன் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளாகும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ ஆதாரங்களின் படி பார்க்கையி்ல், கிரேன் ஓட்டுநர் முதியவர் வருவதை பார்க்காமல் கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது.
கரூரில் அடுத்தடுத்து 3 புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் அசத்தி வரும் அரசுப்பள்ளி மாணவர்