Coimbatore : தனியார் கல்லூரி காம்பவுண்ட் சுவர் இடிந்து 4 பேர் பலி.. கோவையில் சோகம் !!
கோவையில் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் காம்பவுண்ட் சுவர் கட்டுமான பணியின் போது சுவர் விழுந்து 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலியானவர்கள் புலம் பெயர் தொழிலாளர்கள் எனவும் அவர்களை மீட்கும் பணயில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். காயமடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் கோவை தெற்கு காவல் உதவி ஆணையர் ரகுபதிராஜா, கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து காவல் உதவி ஆணையர் ரகுபதிராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், "சுற்றுச்சுவர் கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கும் பொழுது சுவர் இடிந்து விழுந்துள்ளது. ஐந்து பேர் அங்கு வேலை செய்து வந்ததில் நான்கு பேர் உயிரிழந்து விட்டனர், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். உயிரிழந்தவர்களில் மூன்று பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஒருவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர், படுகாயம் அடைந்தவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்" என்றார்.
கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், "கல்லூரி நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கல்லூரியை சுற்றியுள்ள அனைத்து சுவர்களுமே இந்த நிலைமையில் தான் உள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பே கனமழை பெய்யும் பொழுது நானும் செயலாளரும் இங்கு வந்து பார்த்தோம், அப்பொழுதே மழை நீர் முழங்கால் அளவிற்கு இருந்தது. ஏற்கனவே இருமுறை எச்சரித்தும் கல்லூரி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளவில்லை.
கல்லூரி நிர்வாகம் இந்த நிலைமையில் தான் உள்ளது. சுவர் இடிந்து விழுந்ததற்கு மாநகராட்சி பொறுப்பேற்க முடியாது இருந்தாலும், பலமுறை மாநகராட்சி தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது, ஆனால் கல்லூரி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. கல்லூரி நிர்வாகத்தின் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சுற்றுச்சுவர் கம்பி எதுவுமில்லாமல் வெறும் கற்களை மட்டுமே வைத்து கட்டிக்கொண்டு சென்று உள்ளார்கள். பழனியப்பா நகரில் உள்ள ஓடையை ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்ட் கட்டி உள்ளார்கள்" என்றார்.
Jio Bharat : வெறும் ரூ.999க்கு கிடைக்கும் ஜியோ பாரத் போன்.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை.. விதிமுறைகள் என்னென்ன?