கோவை மாவட்டத்தில் யானை தாக்கி ஒரே நாளில் 2 பேர் பலி
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் இருவேறு பகுதிகளில் காட்டு யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வனச்சரகம் தடாகம் பிரிவிற்கு உட்பட்ட மாங்கரை பகுதியில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த யானையை பட்டாசுகள் வெடித்து மலைப்பகுதிக்கு விரட்டினர்.
இதனிடையே யானையை விரட்டும்போது அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் சாமி என்பவரின் மகன் 36 வயதான மகேஷ்குமார் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. மகேஷ்குமார் கோவையில் உள்ள ஒரு தனியார் மருந்து நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். யானை இவரை தாக்கியதை அடுத்து இவர் சத்தம் போட வீட்டினுள் இருந்த இவரது மனைவி திவ்யா மற்றும் அவரது தந்தை பெருமாள்சாமி ஆகியோர் வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது கீழே கிடந்த மகேஷ்குமாரின் அருகிலேயே யானை நின்றிருந்தது. தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டி மகேஷ்குமாரை பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தடாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் உயிரிழந்த மகேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நூலிழையில் உயிர் தப்பிய காட்டு யானை; வெளியான அதிர்ச்சி வீடியோ
மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானையை துரத்தும் போது எதிர்பாராத விதமாக யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓமலூர் அருகே கடத்தப்பட்ட 127 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல்; காவலர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு
இதே போன்று கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த தூவைபதி கிராமத்தில் யானை தாக்கி மருதாசலம் என்பவர் உயிரிழந்தார். கோவை வனச்சரகத்தில் யானை தாக்கி ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.