Asianet News TamilAsianet News Tamil

Maha shivratri | மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் 10 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் பிப்.26-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை ஆதியோகி ரத யாத்திரை கோவையில் நடைபெற உள்ளது.

10 days Adiyogi Ratha Yatra in Coimbatore on the occasion of Mahashivratri dee
Author
First Published Feb 24, 2024, 2:58 PM IST

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் பிப்.26-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை ஆதியோகி ரத யாத்திரை கோவையில் நடைபெற உள்ளது. இந்த யாத்திரையின் மூலம் பக்தர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற முடியும்.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் திரு. வள்ளுவன் அவர்கள் கூறியதாவது:

"கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் 30-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 8-ம் தேதி மிக கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, இவ்விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பிப்.26-ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் ஒரு ஆதியோகி ரதம், சுந்தராபுரம், குனியமுத்தூர், சிங்கநல்லூர், பீளமேடு, சின்னியம்பாளையம், சரவணம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், கணபதி, காந்திரபுரம், ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், வடவள்ளி என கோவையில் பல்வேறு பகுதிகளில் மார்ச் 6-ம் தேதி வரை வலம் வர உள்ளது. ஈஷாவிற்கு நேரில் வந்து ஆதியோகியை தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.

முன்னதாக, 4 ஆதியோகி ரதங்களுடன் கூடிய இந்த யாத்திரையை தவத்திரு பேரூர் ஆதீனம் அவர்கள் கடந்த ஜனவரி 5-ம் தேதி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து ஒவ்வொரு ரதமும் தமிழ்நாட்டின் 4 திசைகளிலும் பயணம் செய்தன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 60 நாட்களில் மொத்தம் 35,000 கி.மீ பயணிக்கும் வகையில் இந்த யாத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கிராமங்கள் வழியாக பயணம் செய்து வரும் இந்த ரதங்கள் மார்ச் 6-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்து யாத்திரையை நிறைவு செய்ய உள்ளன.

இந்தாண்டு, கோவையை தவிர்த்து தமிழ்நாட்டின் 36 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை ஒளிப்பரப்பு மூலம் கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது." இவ்வாறு அவர் கூறினார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்களான திரு. உன்னிகிருஷ்ணன்மற்றும் திரு.தினகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios