படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ஒரு படுக்கைக்கு 3 மாதத்திற்கு ரூ.4,000 இயக்க ஊர்திகள் வரி நிர்ணயம் செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் ஆம்னி பஸ்களின் கட்டணம் ரூ.500 முதல் ரூ.1000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்ட மசோதா தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:

1974ம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில், பயணம் செய்யும்போது பயணிகள் தூங்குவதற்காக படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு வரி விதிப்பிற்கான வழி வகை எதுவும் இல்லை. எனவே அரசானது அத்தகைய படுக்கை வசதிகளுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு வரி விதிப்பதற்காக, இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்டம் 13/1974யை திருத்தம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது.

அதன்படி, பயணிகள் தூங்குவதற்காக படுக்கை வசதியுடன் கூடிய பயணிகளை ஏற்றி செல்லும் ஆம்னி பஸ்களுக்கு ஒரு படுக்கைக்கு மூன்று மாதம் ரூ.4 ஆயிரம் எனவும், இருக்கையுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு இருக்கை ஒன்றுக்கு மூன்று மாதம் ரூ.3 ஆயிரமும் வரி விதிப்பு செய்யப்படும். இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

அதேபோன்று, சுற்றுலா பஸ்களாக இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கும் வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்காலிகமாக 7 நாட்கள் உரிமம் பெறும் ஆம்னி பஸ்களுக்கு இருக்கை ஒன்றுக்கு ரூ.800, படுக்கை ஒன்றுக்கு ரூ.1,000 வரி விதிக்கப்பட இருக்கிறது. இதே 30 நாட்களாக இருந்தால் இருக்கைக்கு ரூ.2 ஆயிரம், படுக்கைக்கு ரூ.2,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பஸ்கள் கால அளவு 90 நாட்களாக இருந்தால் இருக்கைக்கு ரூ.5 ஆயிரம், படுக்கைக்கு ரூ.5,500 வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.