சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை அடைய அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கோலியால் அடைய முடியவில்லை. எனினும் இன்று நடக்க இருக்கும் இரண்டாவது டி20 போட்டியில் அந்த பெருமையை கண்டிப்பாக பெற்றுவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக வலம்வரும் இந்திய கேப்டன் விராட் கோலி, சாதனைகளையும் சதங்களையும் குவித்து வருகிறார். இவர் ஓய்வு பெறுவதற்குள் கிரிக்கெட்டில் பேட்டிங் சார்ந்த பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகிவிடுவார் என்பதில் ஐயமில்லை. 

சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும். அதையும் செய்துவிடுவார் என்றே நம்பப்படுகிறது. ரன்களை குவிப்பதால் ரன் மெஷின் என கோலி அழைக்கப்படுகிறார். 

இந்நிலையில், அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கோலியால் ஒரு சாதனையை நிகழ்த்த முடியாமல் போய்விட்டது. 57 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 1983 ரன்களை குவித்திருந்த கோலி, 17 ரன்களை எடுத்தால் அதிவேக 2000 ரன்கள் என்ற பெருமையை பெற்றிருப்பார். ஆனால் அவரால் முதல் போட்டியில் அதை எட்டமுடியாமல் போய்விட்டது.

எனினும் இன்னும் 17 ரன்களே தேவை என்பதால், அயர்லாந்துக்கு எதிராக இன்று நடைபெற உள்ள இரண்டாவது டி20 போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிவிடுவார். 

கோலிக்கு முன்னதாக கப்டில், மெக்கல்லம் ஆகியோர் மட்டுமே 2000 ரன்களை கடந்துள்ளனர். ஆனால் அவர்களில் கப்டில் 68வது போட்டியிலும் மெக்கல்லம் 66வது போட்டியிலுமே 2000 ரன்களை கடந்தனர். எனவே நாளைய போட்டியில் 17 ரன்கள் குவித்தால் சர்வதேச டி20 போட்டியில் அதிவேக 2000 ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார்.