இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பேருந்தில் விராட் கோலியுடன், அவரது மனைவி  அனுஷ்கா சர்மாவும் சென்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் கடும் கோபம் அடைந்துள்ளனர்.  இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கோலியும், பாலிவுட் அனுஷ்கா சர்மாவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இத்தாலியில் வெகுவிமரிசையாக திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு, கணவர் விளையாடும் பெரும்பாலான போட்டிகளுக்கு நேரில் செல்லும் அனுஷ்கா சர்மா பார்வையாளராக இருந்து, கணவர் விராட் கோலியை உற்சாகப்படுத்தி வருகிறார். 
 அண்மையில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டிகளில் கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய போட்டிகளுக்கு நேரில் சென்று, விராட் கோலியை உற்சாகப்படுத்தும் விதமாக அனுஷ்கா சர்மா நடந்து கொண்டார். ஆனால் ஐ.பி.எல் தொடரில் கோலி மட்டும் அல்ல பெங்களூர் அணியும் சோபிக்கவில்லை. வழக்கமாக சிறப்பாக ஆடும் கோலி கூட ஒன்று இரண்டு ஆட்டங்களில் மட்டுமே தனது திறமையை வெளிப்படுத்தினார். அதிலும் அனுஷ்கா நேரில் வராத போட்டிகளில் தான் கோலி அதிரடி காட்டினார். இதற்கு காரணம் அனுஷ்கா ஷர்மா தான் என்று ரசிகர்கள் அப்போதே கூறி வந்தனர். அனுஷ்கா நேரில் வந்தால் பெங்களூர் அணி தோற்றுவிடுகிறது, அவர் ராசியில்லாதவர், அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் தான் இங்கிலாந்தில் இந்திய அணியினர் செல்லும் பேருந்தில் தனது மனைவி அனுஷ்காவையும் அழைத்துக் கொண்டு, கோலி சென்றுள்ளார். முன்னதாக ஓல்டுடிராபோர்டில் நடந்த போட்டியில் 8 ரன்னை எட்டியபோது, டி20 போட்டிகளில் 2,000 ரன்களை எட்டிய 4வது வீரர் என்றும், குறைந்த போட்டிகளில் 2,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். அந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டியை காண அனுஷ்கா சென்று இருப்பது ரசிகர்களுக்கு பகீர் என்று ஆகியுள்ளது. ஐ.பி.எல் போட்டிகளை அனுஷ்கா  நேரில் சென்று பார்த்த போது ஏற்பட்ட நிலை தற்போது இந்திய அணிக்கும் வந்துவிடக்கூடாது என்று ரசிகர்கள் கடவுளை வேண்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால் இதற்கும் சில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் அனுஷ்கா – கோலி ஜோடியை கிண்டல் செய்யக்கூடாது என்றும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.