தோற்றத்தில் அச்சு அசல் தொழிலதிபர் விஜய் மல்லையா போலவே காட்சி அளித்த பக்கா நிரபராதி ஒருவர் தற்போது லண்டனில் நடந்துவரும் இந்தியா - ஆஸ்திரேலிய மேட்சைக் கண்டுகளிக்க வந்துள்ளார். ஒருவேளை இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையாவாக இருக்கக்கூடுமோ என்ற எண்ணத்தில் நிருபர்கள் அவர் முன் மைக்கை நீட்டியபோது,” நான் கிரிக்கெட் போட்டி பாக்க வந்திருக்கேன்.பேட்டி குடுக்க அல்ல’என்றவுடன் நிருபர்கள் ஜகா வாங்கினர்.

இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ. 9,000 கோடி கடன் பெற்று தப்பிச்சென்ற விஜய் மல்லையா, தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.  மேற்கொண்டு வருகிறது. மேற்கொண்டு வருகிறது.மேற்கொண்டு வந்துகொண்டேயிருக்கிறது. இடையில் விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளர் அனுமதி வழங்கினார். இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும், உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. விஜய் மல்லையா  போலவே காட்சி அளித்த அவர் இந்தப்போட்டியை காண்பதற்கு வந்திருந்தார். அவரை பார்த்தவுடன் நிருபர்கள் சூழ்ந்து பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது ''நான் இங்கு கிரிக்கெட் பார்க்கவே வந்தேன்,'' என்று கூறிவிட்டு மைதானத்துக்குள் வேகமாக சென்றுவிட்டார்.

மேட்ச் பார்க்கவந்தவர் ஒருவேளை விஜய் மல்லையாவாகவாக இருக்கக்கூடுமோ என்கிற ரீதியில் விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம்.ஏனெனில் இதுவரை நடந்த விஜய் மல்லையா தொடர்பான அத்தனை விசாரணைகளும் அவ்வாறே நடந்துள்ளன.