நல்ல ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக்கை இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, நாளை நடக்கிறது. 

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அம்பாதி ராயுடு, யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் இலங்கையில் நடந்த நிதாஹஸ் டிராபி இறுதி போட்டி மற்றும் ஐபிஎல் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடி தனது திறமையை மீண்டுமொரு நிரூபித்த தினேஷ் கார்த்திக்கும் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

நாளை இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ள நிலையில், இதுதொடர்பாக பேசிய முன்னாள் அதிரடி வீரர் சேவாக், தினேஷ் கார்த்திக் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவரது ஃபார்மை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள இதுவே சரியான தருணம்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரெய்னாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பளிக்கலாம்.

அதேபோல, மூன்றாவது வரிசையில் கே.எல்.ராகுலை களமிறக்கிவிட்டு, டி20 போட்டிகளைப்போலவே கோலி 4ம் வரிசையில் களமிறங்கலாம் என சேவாக் ஆலோசனை தெரிவித்துள்ளார்.