2019 உலக கோப்பையில் தோனி ஆடுவது குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் தோனி. தற்போது கேப்டன்சியிலிருந்து விலகி ஒரு வீரராக ஆடிவரும் தோனி, 2019 உலக கோப்பையில் ஆட வேண்டுமா என்ற விவாதம் எழ தொடங்கியுள்ளது. உலக கோப்பையை வென்று கொடுத்த தோனி, அடுத்த உலக கோப்பையில் ஆடுவது குறித்த விவாதம் எழுந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது தான். 

எனினும் தோனியின் வயதையும் இங்கிலாந்துக்கு எதிரான அவரது மந்தமான பேட்டிங்கையும் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் 2019 உலக கோப்பையில் தோனி கண்டிப்பாக ஆடுவார் என்பதே அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலியின் நிலைப்பாடாக உள்ளது. 

மேலும் தோனியின் அனுபவ அறிவு உலக கோப்பைக்கு தேவை என்பதன் அடிப்படையில், அவர் உலக கோப்பை வரை ஆடுவது அவசியம் என முன்னாள் கேப்டன் கங்குலி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2019 உலக கோப்பை வரை தோனி ஆட வேண்டுமா? என்ற கேள்விக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய சச்சின் டெண்டுல்கர், 2019 உலக கோப்பை வரை ஆடுவது என்பது தோனி என்ன நினைக்கிறார் என்பதை பொறுத்ததே. அணியின் கேப்டன் விராட் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து எனக்கு தெரியாது என சச்சின் டெண்டுல்கர் பதிலளித்துள்ளார்.