இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி குறித்த முன்னாள் வீரர்களின் பரிந்துரை தொடர்பான ஒரு தகவல் கிடைத்துள்ளது. 

இந்திய அணி சொதப்பலான பேட்டிங்கின் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே தோல்வியடைந்தது. முதல் போட்டியில் விராட் கோலியை தவிர வேறு யாரும் சரியாக பேட்டிங் ஆடவில்லை. இரண்டாவது போட்டியில் யாருமே சரியாக ஆடவில்லை. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை நன்றாக பயன்படுத்தி பந்துவீசிய ஆண்டர்சன் மற்றும் பிராடின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் ஆட வாய்ப்பு பெற்ற தினேஷ் கார்த்திக், அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான தினேஷ், இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே வெறும் 4 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்தார். 

மொத்தமாக ஆடிய 4 இன்னிங்ஸ்களில் இரண்டில் டக் அவுட். தினேஷ் கார்த்திக்கால் வலைப்பயிற்சியின் போது கூட பந்துகளை அடிக்க முடியவில்லை எனவும் இனிவரும் போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் எனவும் கங்குலி தெரிவித்திருந்தார். 

எனினும் ரிஷப் பண்ட் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவே என்ற தகவல் கிடைத்துள்ளது. ஏனெனில் லார்ட்ஸ் மைதானத்தில் தினேஷ் கார்த்திக் மட்டும் திணறவில்லை. ஒட்டுமொத்த இந்திய அணியுமே திணறியது. மேலும் என்னதான் நல்ல வீரராக இருந்தாலும், இங்கிலாந்து சூழலில் டெஸ்ட் போட்டியில் ஆடுவது எளிதான காரியம் அல்ல. மேலும் விக்கெட் கீப்பிங்கை பொறுத்தமட்டில் தினேஷ் கார்த்திக் நல்ல அனுபவம் மிக்கவர். விக்கெட் கீப்பிங்கில் கேட்ச்களை விட்டுவிடக்கூடாது. டெஸ்ட் போட்டிகளில் கேட்ச்களை விடாமல் பிடிப்பது முக்கியம். 

அதனால் ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக்கிற்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் ரிஷப் பண்ட் சேர்க்கப்படுவது சந்தேகம்தான் எனவும் தகவல் கிடைத்துள்ளது.