அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, சில புதிய மைல்கற்களை எட்டியுள்ளது. மேலும் இந்திய அணியின் சிறந்த டி20 வெற்றிகளில் முக்கியமான வெற்றியாக இதுவும் உள்ளது. 

இந்த போட்டியின் சில சாதனைத் துளிகள்:

1. இந்தியாவின் மிகப்பெரிய டி20 வெற்றி

இந்த போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுதான் இந்திய அணி அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற மிகப்பெரிய டி20 வெற்றி. இதற்கு முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு இலங்கை அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. 

2. இந்தியாவுக்கு எதிராக எதிரணி எடுத்த மிகக்குறைந்த டி20 ரன்

214 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியை 70 ரன்களில் இந்திய அணி சுருட்டியது. இதுதான் இந்திய அணியுடனான போட்டியில் எதிரணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர். இதற்கு முன்னதாக 2012ம் ஆண்டு இங்கிலாந்து எடுத்த 80 ரன்கள் தான் இந்திய அணிக்கு எதிராக ஒரு அணி எடுத்த குறைந்த பட்ச டி20 ஸ்கோராக இருந்தது. 

3. மிகச்சிறந்த டி20 வெற்றிகளில் மூன்றாமிடம் பிடித்த இந்தியா

அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் டி20 போட்டிகளில் வென்ற அணிகளின் பட்டியலில் இந்திய அணி மூன்றாமிடம் பிடித்துள்ளது. கென்யாவை 172 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை, இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியும் அயர்லாந்தை அதே 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த பட்டியலில் மூன்றாமிடத்தை பிடித்தது.