ரோஹித் சர்மா பேட்டிங் ஆடியதைப்போல வேறு எந்த வீரரும் ஆடி பார்த்ததில்லை என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. மூன்றாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். அவரது பேட்டிங் வியப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இங்கிலாந்து பவுலர்கள் திறம்பட வீசிய பந்துகளையும் ரோஹித் சிறப்பாக ஆடினார்.

அவருக்கே உரிய பாணியில் பல வித்தியாசமான ஷாட்களை ரோஹித் ஆடினார். ரோஹித்தின் ஆட்டம் ரசிகர்களை கடந்து கிரிக்கெட் வீரர்களையும் கவர்ந்தது. ரோஹித்தின் அதிரடியான ஆட்டத்தை இங்கிலாந்து அணியின் சீனியர் பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சன் புகழ்ந்திருந்தார். 

ரோஹித் சர்மா ஒரு சிறந்த வீரர். ரோஹித் டி20 வீரர் அல்ல. அவர் அனைத்து விதமான போட்டிகளுக்கும் தகுதியான வீரர். அவரது திறமைக்கு தலைவணங்க வேண்டும் என ஆண்டர்சன் தெரிவித்தார்.

இந்நிலையில், ரோஹித்தின் ஆட்டத்தை ஹர்திக் பாண்டியாவும் புகழ்ந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ஹர்திக் பாண்டியா, ரோஹித் அபாரமாக ஆடினார். தனி நபராக நின்று அணியை வெற்றி பெற செய்தார். நாங்கள் ரோஹித்திடம் இருந்து இதை எதிர்பார்த்தோம். ரோஹித் ஆடியது போன்ற ஒரு ஆட்டத்தை நான் பார்த்ததில்லை என ஹர்திக் பாண்டியா புகழ்ந்துள்ளார்.