சமகால கிரிக்கெட்டில் தோனி தான் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 

அடுத்த மாதம்(ஜூலை) 7ம் தேதியுடன் தோனிக்கு 37 வயது நிறைவடைகிறது. ஆனால் இந்த வயதிலும் இளம் வீரர்களுக்கு நிகரான உடற்தகுதியுடன் இருக்கிறார் தோனி. சிறந்த கேப்டன், நல்ல பேட்ஸ்மேன் என்பதை எல்லாம் கடந்து தோனி, மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை மறுக்க முடியாது. 

கீப்பிங்கில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் தோனி. கீப்பர்கள் கால்காப்பு, க்ளௌஸ் ஆகியவற்றை அணிந்திருப்பதால், பெரும்பாலும் கீப்பர்கள் வெகுதூரம் ஓடமாட்டார்கள். இந்த விஷயத்தில் தோனி முற்றிலும் மாறுபட்டவர். கால்காப்பை மாட்டிக்கொண்டு பவுண்டரி கோடு வரை ஓடி பந்தை பிடிப்பவர் தோனி. விரைவாக ரன் அவுட் மற்றும் ஸ்டம்பிங் செய்வதிலும் தோனி வல்லவர்.

சமகால கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்றால் தோனி என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சிறந்த விக்கெட் கீப்பருமான ஆடம் கில்கிறிஸ்டின் பதில் தோனி அல்ல.

சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கில்கிறிஸ்ட், இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் தான் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர். நிறைய திறமையான விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். எனினும் சாரா டெய்லர் தான் சிறந்த விக்கெட் கீப்பர் என கருதுகிறேன்.

இதை நான் சற்று தைரியமாகவே சொல்கிறேன். சாரா டெய்லர் கடினமான லெக் திசை ஸ்டம்பிங்குகளை அசாத்தியமாக செய்கிறார். அவரை போலவே மற்றொரு மகளிர் விக்கெட் கீப்பரான அலைசா ஹூலியும் சிறந்த விக்கெட் கீப்பராக திகழ்கிறார் என கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.