இந்திய அணியின் மிடில் ஆர்டரில் தொடர்ந்து மாற்றங்கள் செய்வது அணிக்கு நல்லதல்ல என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி எச்சரித்துள்ளார். 

இந்திய அணியில் 4ம் வரிசையில் எந்த வீரரை களமிறக்குவது என்ற பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

ராகுலை 4ம் வரிசையில் களமிறக்க வேண்டும் என்பதே கங்குலி, லட்சுமண் போன்ற முன்னாள் ஜாம்பவான்களின் கருத்தாக உள்ளது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் 4ம் வரிசையில் களமிறக்கப்பட்ட ராகுல் நீக்கப்பட்டு, மூன்றாவது போட்டியில் அந்த இடத்தில் தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார். 

அணி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு லட்சுமண் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மிடில் ஆர்டரில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவது தொடர்பாக முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கங்குலி, இந்திய அணியின் 4ம் வரிசை வீரராக ராகுல் நிரந்தரமாக களமிறக்கப்பட வேண்டும். 4ம் வரிசை வீரருக்கான நிரந்தர தீர்வாக ராகுல் இருப்பார். அவரை தொடர்ந்து அந்த இடத்தில் களமிறக்க வேண்டும். அப்போதுதான், அணியில் அவரது இடம் குறித்த கவலை இல்லாமல், அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அதைவிடுத்து தொடர்ச்சியாக வீரர்களை மாற்றி மாற்றி களமிறக்குவது என்பது அணிக்கு நல்லதல்ல என கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.