தோனி களத்தில் நிலைக்க அதிகமான பந்துகளை எடுத்துக்கொள்வது எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு அழுத்தத்தை அதிகரிக்கிறது என முன்னாள் வீரர் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் தோனியின் மந்தமான பேட்டிங், அவர் மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளது. தோனி மந்தமாக ஆடும்போதெல்லாம் அவர் மீது விமர்சனங்கள் எழுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அவற்றிற்கெல்லாம் தனது திறமையின் மூலமே இதுவரை தோனி பதிலளித்து வந்துள்ளார். 

அதேபோல இப்போதும் தோனிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 323 என்ற இலக்கை விரட்டும்போது, ஒரு முறை கூட ரன் ரேட்டை உயர்த்தும் விதமாக பெரிய ஷாட்களை ஆட தோனி முயற்சிக்கவில்லை. அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. 59 பந்துகளை எதிர்கொண்ட தோனி, 37 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

அதேபோல், மூன்றாவது போட்டியிலும் தோனி மந்தமாகவே ஆடினார். 66 பந்துகளை எதிர்கொண்டு 42 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த இரண்டு போட்டிகளிலுமே டாட் பந்துகள் அதிகம். தோனி வழக்கமாகவே களத்தில் நிலைக்க அதிகமான பந்துகளை எடுத்துக்கொள்வார். ஆனால் அவற்றை கடைசியில் அதிரடியாக ஆடி ஈடுகட்டிவிடுவார்.

தோனி மட்டுமல்ல; எந்த வீரராக இருந்தாலும் களத்தில் நிலைக்க பந்துகளை வீணாக்கினால், நிலைத்ததற்கு பிறகு அதிரடியாக ஆடி அவற்றை ஈடுகட்டுவதுதான் வழக்கம். ஆனால் தோனி, இந்த இரண்டு போட்டிகளிலும் கடைசி வரை ஆட தவறிவிட்டார். அதுதான் அவர் மீதான விமர்சனங்கள் வலுத்ததற்கு காரணமாக அமைந்துவிட்டன. 

இந்நிலையில், தோனியின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் காம்பீர், தோனி களத்தில் நிலைக்க அதிகமான பந்துகளை எடுத்துக்கொள்வது எதிர்முனையில் ஆடும் வீரருக்கு அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஸ்பின் பவுலிங்கை திறம்பட ஆட தோனி முனைய வேண்டும். தோனி அதற்கான தீவிர பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தோனியோ மற்ற வீரர்களோ களத்தில் நிலைக்க நேரம் எடுத்துக்கொண்டால் கடைசி வரை களத்தில் நின்று அதை ஈடுகட்ட வேண்டும். ஆனால் தோனி அதை செய்ய தவறிவிட்டார். தோனி 50 ஓவர் வரை ஆடியிருந்தால் இந்திய அணியின் ஸ்கோர் 280 வரை வந்திருக்கும். ஆனால் தோனி அதை செய்யவில்லை என காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.