இங்கிலாந்து லயன்ஸ், இந்தியா ஏ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ ஆகிய அணிகளுக்கு இடையே முத்தரப்பு ஒருநாள் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. 

இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

இந்திய அணியிடம் சதமடித்த நிக் கபின்ஸ், இந்த போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். லிவிங்ஸ்டோன் மற்றும் பென் வோக்ஸ் ஆகியோரும் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர். தொடக்க ஆட்டக்காரர் டாம் கோலர் 67 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய சாம் ஹெய்ன், வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். 145 ரன்கள் குவித்த சாம் ஹெய்ன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் முல்லானேவும் 58 ரன்கள் குவித்தார். டாம் கோலர், சாம் ஹெய்ன், ஸ்டீவன் ஆகிய மூவரை தவிர மற்ற எந்த வீரர்களும் சோபிக்கவில்லை. இவர்கள் மூவரின் அதிரடி பேட்டிங்கால் இங்கிலாந்து லயன்ஸ் அணி 318 ரன்களை குவித்தது. 

319 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியில் தொடக்க வீரர்கள் ஹேம்ராஜ் மற்றும் பிளாக்வுட் ஆகியோர் ஓரளவிற்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஹேம்ராஜ் 35 ரன்களிலும் பிளாக்வுட் 40 ரன்களிலும் அவுட்டாகினர். அவர்களுக்கு பிறகு ஜேசன் முகமதுவும் ரோவன் பவலும் மட்டுமே அரைசதம் கடந்தனர். ஆனால் அவர்களும் அரைசதம் கடந்த மாத்திரத்திலேயே அவுட்டாகினர். அவர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, அந்த அணி 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து இங்கிலாந்து லயன்ஸ் அணி, 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 

நாளை நடைபெறும் அடுத்த போட்டியில், இந்தியா ஏ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் மோதுகின்றன.