இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி. 

அஷ்வின் மற்றும் ஷமியின் அசத்தலான பந்துவீச்சில் இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டத்திலேயே சுருண்டது. நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தில் குரானின் கேட்ச்சை தினேஷ் கார்த்திக் பிடித்திருந்தால், முதல் நாளே இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிந்திருக்கும். ஆனால் அந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதால், இங்கிலாந்து அணி, இன்றும் முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது. 

இன்றைய ஆட்டம் தொடங்கியதும் முதல் ஓவரை அஷ்வின் வீசினார். இந்த ஓவரில் ஆண்டர்சன் 2 ரன்கள் அடித்தார். அடுத்த ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் நான்காவது பந்து, குரானின் பேட்டில் எட்ஜாகி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் சென்றது. நேற்று தவறவிட்ட தினேஷ் கார்த்திக், இம்முறை தவறவிடவில்லை. 287 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது.