அதிரடி கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாரிக்கப்படுகிறது. இதில், ஹீரோவாக நடிப்பது யார் என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாலிவுட்டில் சமீபகாலமாக, பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாரிக்கப்படுவது டிரெண்டாகி உள்ளது. குறிப்பாக,விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதற்கு, பாலிவுட் இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன்படி,சமீபத்தில் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், தடகள வீரர் மில்கா சிங், நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக எடுக்கப்பட்டு, வெளியாகி ஹிட் அடித்துள்ளன.

இந்த வரிசையில், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங் கதை படமாக தயாரிக்கப்படுகிறது. இதில், பாடகர் மற்றும் நடிகர் தில்ஜித் தோசன்ஜ் ஹீரோவாக நடிக்கிறார். பிரபல வீரராக விளையாடி வந்த நிலையில், சந்தீப் சிங் கடந்த 2006ம் ஆண்டு ரயிலில் பயணித்தபோது எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கி, சுயநினைவை இழந்தார். படுகாயமடைந்த சந்தீப் சிங் மீண்டும் எழுந்து நடப்பதே கடினம் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனாலும், கோமாவில் இருந்து திரும்பிய அவர், மீண்டும் ஹாக்கி மைதானத்தில் களம் புகுந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தினார். சந்தீப் ஒரு சீக்கியர் என்பதால், தில்ஜித் தோசன்ஜ் இந்த வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் எனக் கூறப்படுகிறது.

அதேசமயம், மற்றொரு சீக்கியரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. புற்று நோயில் வீழ்ந்து மீண்டும் நலம்பெற்று கிரிக்கெட் விளையாடி வரும் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக எடுப்பதற்கு உரிய சுவாரஸ்ய சம்பவங்களை கொண்டதாகும். ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது யார் என்பதில் தான் குழப்பம் நீடிக்கிறது. இதுபற்றி தில்ஜித் கூறுகையில், ‘’சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாறு படம் முடிந்தவுடன் மீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை கதையில் நடிக்க விரும்புகிறேன்.

ஒருவேளை அது யுவராஜ் சிங்கின் கதையாகக் கூட இருக்கலாம். அவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மாஸ் ஹீரோவுக்கு உண்டா அனைத்து தகுதியும் கொண்டவர் யுவராஜ் சிங். ஆனால், இப்போதைக்கு அவரது வேடத்தில் நான் நடிப்பதில் விருப்பமில்லை. வேறு யாரேனும் விருப்பம் இருந்தால் நடிக்கலாம்,’’ எனக் கூறியுள்ளார். எனினும், யுவராஜ் சிங் வேடத்தில் நடிப்பதற்கு, தில்ஜித்துக்கு விருப்பம் இல்லை என்றே தகவல்கள் குறிப்பிடுகின்றன. யுவராஜ் சிங் கதை எப்போது படமாகும், யார் ஹீரோவாக நடிப்பார் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.