செஸ் போட்டியின் கிராண்ட்மாஸ்டர் சிறப்பை 13 வயது கூட ஆகாத சென்னையின் இளம் வீரர் பெற்று புகழின் உச்சியில் நிற்கிறார். 

செஸ் போட்டியில் "கிராண்ட்மாஸ்டர்" என்ற பெயர் வீரரின் திறமையை புகழக்கூடிய வார்த்தைகளில் ஒன்று. அந்த பெயர் எளிதில் கிடைத்து விடாது என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு செஸ் தரவரிசையில் 2500 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்ல மூன்று பெரிய தொடர்களில் தரவரிசையில் உயரிய நிலையில் உள்ள வீரர்களை வீழ்த்தியிருக்க வேண்டும். இப்படியெல்லாம் சாதித்து இருந்தால் தான் "கிராண்ட்மாஸ்டர்" என்ற பெயரை பெற முடியும்.

அந்த சிறப்பை சென்னை முகப்பேரை சேர்ந்த 8–ஆம் வகுப்பு மாணவரான பிரக்ஞானந்தா தற்போது பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் புதிய வரலாற்றை படைத்திருக்கிறார். ஏற்கனவே இரண்டு பெரிய போட்டிகளில் சாதித்திருந்த பிரக்ஞானந்தா தற்போது இத்தாலியில் நடந்து வரும் கிரெடின் ஓபன் செஸ் தொடரில் 8 ரௌண்ட் முடிவில் 6.5 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார். அதனுடன் கிராண்ட்மாஸ்டருக்கு உரிய 3–வது தேர்வு நிலையையும் எட்டி உள்ளார்.

13 வயதை இன்னும் இரண்டு மாதங்களில் தொடப்போகும் பிரக்ஞானந்தா இதன்மூலம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற இளம் இந்திய வீரர், ஒட்டுமொத்த அளவில் 2–வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

உக்ரைனின் செர்ஜி கர்ஜாகின் 2002–ஆம் ஆண்டு, தனது 12 ஆண்டு 7 மாதங்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றதே சாதனையாகும். 

முன்னாள் உலக சாம்பியன் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் கூட தனது 18–வது வயதில்தான் கிராண்ட்மாஸ்டர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.