மூன்று டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை வீரர்களின் குடும்பத்தினர் அவர்களுடன் இருக்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. 

இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய அணி நீண்ட தொடரில் ஆடிவருகிறது. தலா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் நடந்து முடிந்துவிட்டது. டி20 தொடரை இந்திய அணியும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் வென்றது. 

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 11ம் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது. சுமார் இரண்டரை மாதங்கள் வீரர்கள் இங்கிலாந்தில் இருக்க வேண்டியிருப்பதால், குடும்பத்தை அழைத்து செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்தது. 

ஒருநாள் போட்டிகள் கடந்த 17ம் தேதியுடன் முடிந்துவிட்டது. அதன்பிறகு ஆகஸ்ட் ஒன்றாம் தேதிதான் முதல் டெஸ்ட் போட்டி என்பதால், வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வெளியே சென்று சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். 

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, ஒரு பயிற்சி போட்டி நடக்க உள்ளது. அது வரும் 25ம் தேதி(நாளை மறுநாள்) தொடங்க உள்ளது. இந்நிலையில், இதுவரை மனைவி மற்றும் குடும்பத்தினருடன் உலவ அனுமதித்த பிசிசிஐ, போட்டிகள் தொடங்க உள்ளதால் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்க உத்தரவிட்டுள்ளது. மூன்று போட்டிகள் முடியும் வரை வீரர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் வீரர்களுடன் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல், அவர்கள் போட்டியில் முழு கவனத்தையும் ஈடுபாட்டையும் செலுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.