மூன்று மாதங்களாக இழுபறி நீடித்துவந்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த ஊதியத்தை வழங்க பிசிசிஐ இறுதியாக ஒப்புதல் வழங்கியது.

பிசிசிஐ நிர்வாகத்தை கவனிப்பதற்காக கிரிக்கெட் நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதன்  சிஓஏ கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர்களின் திருத்தப்பட்ட ஊதியத்தை அறிவித்தது. 

ஆனால், "இதற்கு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும்" என்று கூறி பிசிசிஐயின் கையெழுத்திட தற்காலிக செயலாளர் அமிதாப் செளத்ரி மறுத்து வந்தார். இதனால் கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த ஊதியத்தை வழங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது. 

மேலும், வரும் ஜூலை மாதம் அயர்லாந்து, இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிற நிலையில் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதிலும் சிஓஏ அமைப்புக்கு கருத்து வேறுபாடு இருந்தது. 

எனினும், நேற்று பொதுக்குழுக் கூட்டம் கூடியதில் 28 மாநில சங்கங்கள் பங்கேற்றன. அனைத்து தீர்மானங்களுக்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.  

திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தின்படி ஏ பிளஸ் வீரருக்கு ரூ.7 கோடி, ஏ பிரிவு வீரருக்கு ரூ.5 கோடி, பி பிரிவு வீரருக்கு ரூ.3 கோடி, சி பிரிவு வீரருக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும்.

பெண் வீராங்கனைகள் உள்பட உள்ளூர் வீரர்களுக்கும் ஊதியத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. 

உத்தரகண்ட், பிகார், வடகிழக்கு மாநிலங்கள் வரும் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட சிஓஏ வழங்கிய அனுமதிக்கு சிறப்பு பொதுக்கூட்டம் ஒப்புதல் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.