சமகால கிரிக்கெட்டில் தோனியை விட சிறந்த விக்கெட் கீப்பர் இங்கிலாந்து மகளிர் அணியின் சாரா டெய்லர் தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் கூட ஜெயிக்காமல், 5-0 என இங்கிலாந்திடம் தொடரை இழந்தது ஆஸ்திரேலியா. இந்த தொடர் முழுவதுமே இங்கிலாந்து தான் ஆதிக்கம் செலுத்தியது. முதல் நான்கு போட்டிகளில் மிகவும் எளிதாக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் கடைசி போட்டியில் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தது ஆஸ்திரேலியா. 

கடைசி போட்டியிலும் இங்கிலாந்துதான் வென்றது என்றாலும் கூட, மற்ற 4 போட்டிகளை போல எளிதாக வெல்லவிடவில்லை ஆஸ்திரேலியா. கடைசி வரை இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தது. 481 என்ற சாதனை ஸ்கோரை அடித்த இங்கிலாந்தை, 206 ரன்களுக்கு திணறவிட்டனர் ஆஸ்திரேலிய பவுலர்கள். எனினும் தனி நபராக நின்று சதமடித்து, அணியை வெற்றி பெற செய்தார் பட்லர். கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்திடம் தோற்கவில்லை. பட்லரிடம் தான் தோற்றது என்று கூறலாம்.

அந்தளவிற்கு பட்லர் சிறப்பாக ஆடினார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, மறுபுறம் மனதை தளரவிடாமல் உறுதியுடன் களத்தில் நின்று வெற்றியை பறித்தார் ஜோஸ் பட்லர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன், பட்லரை புகழ்ந்து தள்ளினார். 

அப்போது பேசிய டிம் பெய்ன், பட்லர் மிகச்சிறந்த வீரர். இப்போதைய சூழலில் உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் பட்லர் தான். பட்லருக்கு சவால் விடும் வகையிலான விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள் இல்லை. தோனி சிறந்த வீரர் தான்.

ஆனால் தற்போதைய சூழலில் பட்லர் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டை பற்றியும் அவரது பலத்தை பற்றியும் அவர் நன்கு அறிந்துவைத்திருக்கிறார் என டிம் பெய்ன் தெரிவித்தார். 

அண்மையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட், சமகால கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பர், இங்கிலாந்து மகளிர் அணியின் சாரா டெய்லர் தான் என கூறி தோனியை புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.