இங்கிலாந்துக்கு எதிரான முதல் 4 போட்டிகளிலும் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, 5வது போட்டியிலும் தோல்வி அடைவது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. 

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இந்த தொடர் முழுவதும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலிய அணியை கத்துக்குட்டி அணியை அடிப்பது போல அடித்து 4 போட்டிகளில் தோற்கடித்திருக்கிறது. 

முதல் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது. மூன்றாவது போட்டியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு 481 ரன்கள் என்ற சாதனை ஸ்கோரை அடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை 242 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவிற்கு வரலாற்று படுதோல்வியை பரிசாக வழங்கியது. நான்காவது போட்டியிலும் இங்கிலாந்தே வெற்றி பெற்றது. 

கடைசி போட்டியிலாவது வெற்றிபெறும் முனைப்பில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. 

தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் 22 ரன்களிலும் டிராவிஸ் ஹெட் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய ஸ்டாய்னிஸ்(0), ஷான் மார்ஷ்(8), டிம் பெய்ன்(1) என வரிசையாக அவுட்டாகினர். 

15 ஓவருக்கு உள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய ஆஸ்திரேலிய அணிக்கு கேரியும் ஷார்ட்டும் ஓரளவிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். எனினும் கேரியும் அவுட்டாக அதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் ஷார்ட் மட்டும் நிதானமாக ஆடிவந்தார். ஆனாலும் மறுபுறம் அனைவரும் ஆட்டமிழந்தனர். ஷார்ட் மட்டும் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

34.4 ஓவரில் 205 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்டானது. நல்ல ஃபார்மில் இருக்கும் இங்கிலாந்து இந்த ஸ்கோரை எளிதில் எட்டி வெற்றி பெற்றுவிடும்.