இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக எஸெக்ஸ் கவுண்டி அணியுடன் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆடிவருகிறது. 

இது, அங்கீகாரமில்லாத போட்டி என்பதால் இந்திய அணியின் 18 வீரர்களையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் தவான் முதல் பந்திலேயே அவுட்டானார். அதன்பிறகு புஜாரா(1), ரஹானே(17) என அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் விழ மறுபுறம் நிதானமாக ஆடிய முரளி விஜய் அரைசதம் கடந்து அவுட்டானார். 

அதன்பிறகு கோலியும் 68 ரன்களில் வெளியேறினார். இக்கட்டான நிலையிலிருந்து அணியை ஓரளவிற்கு கோலியும் முரளி விஜயும் மீட்டு கொடுத்தனர். அதன்பிறகு தினேஷ் கார்த்திக்கும் ராகுலும் சிறப்பாக ஆடி அணியை மீட்டனர். 58 ரன்களில் ராகுலும் 82 ரன்களில் தினேஷும் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா அரைசதம் கடந்து அவுட்டானார். கருண் நாயர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் களமிறங்கினர். கடைசியாக களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 395 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்த போட்டியில் 18 வீரர்களையும் களமிறக்கலாம் என்றபோதிலும் அஷ்வின் களமிறக்கப்படவில்லை. ஏனென்ற தகவல் பின்னர் வெளிவந்தது. வலைப்பயிற்சியின்போது வலது கையில் அஷ்வினுக்கு காயம் ஏற்பட்டதால், காயம் பெரிதாகிவிடாமல் இருப்பதற்காக அவர் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டையுமே செய்யவிடாமல் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகள் தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அஷ்வினையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காக ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில், அதற்குள் அஷ்வினின் காயம் குணமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.