ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிக்காக பெங்களூரு சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் சில முக்கிய வீரர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியா நடத்தும் 13 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், இந்தியா விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று பாகிஸ்தான் விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
கடைசியாக அகமதாபாத் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 12ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், முதலில் விளையாடிய பாகிஸ்தான் 191 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து வரும் 20 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 18ஆவது லீக் போட்டி பெங்களூருவில் நடக்க இருக்கிறது. இதற்காக பாகிஸ்தான் வீரர்கள் கடந்த ஞாயிறன்று பெங்களூருவிற்கு வருகை தந்தனர்.
பெங்களூரு வந்த வீரர்கள் இரவு உணவிற்கு வெளியில் சென்றிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், தான் பாகிஸ்தானின் முக்கிய வீரர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவின் கார்டன் சிட்டி என்று சொல்லப்படும் பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனினும், இது வானிலை மாற்றத்தின் ஒரு நிகழ்வாக இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் அகமதாபாத்திலிருந்து பெங்களூரு வந்த பாகிஸ்தான் வீரர்களில் சிலருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் முக்கியமாக கருதப்படுவது அப்துல்லா ஷாபிக் தான். இவரைத் தொடர்ந்து ஷாகீன் ஷா அஃப்ரிடி, உசாமா மிர் மற்றும் ஃபகர் ஜமான் ஆகியோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக இன்று பாகிஸ்தான் வீரர்கள் யாரும் பயிற்சியை மேற்கொள்ளவில்லை. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களில் சில வீரர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டத., அவர்களில் பெரும்பாலோர் அதிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். குணமடையும் நிலையில் உள்ளவர்கள் குழு மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
