தப்பு பண்ணீட்டீங்க பாய்: மைதானத்தில் சீரிய கோலிக்கு கொட்டு வைத்த ஐசிசி - என்ன தண்டனை தெரியுமா?
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியா வீரர் சாம் கொன்ஸ்டாஸ் உடன் மோதல் போக்கில் ஈடுபட்ட இந்திய வீரர் விராட் கோலிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளன. தொடரின் 4வது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பாக்ஸிங்டே டெஸ்ட் என்று அழைக்கப்படும் 4வது போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணி வீரர்களும் மூர்க்கமாக விளையாடி வருகின்றனர்.
அதிரடி காட்டிய சாம் கொன்ஸ்டாஸ்
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் இந்திய வீரர்களின் பந்து வீச்சை சாமர்த்தியமாக எதிர்கொண்டு பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டார். குறிப்பாக உலகின் நம்பர் 1 வீரரான பும்ராவின் பந்தை துளியும் தயக்கம் இன்றி ரிவர்ஸ் ஸ்வீப் முறையில் எதிர் கொண்டு சிக்ஸ், பவுண்டரி என தெறிக்கவிட்டார்.
மோதல் போக்கில் கோலி
இளம் வீரரின் அதிரடி இந்திய வீரர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதனிடையே பீல்ட் சேஞ்சின் போது விராட் கோலி ஆஸி வீரர் சாம் கொன்ஸ்டாஸ்ன் தோள்பட்டையில் மோதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிகழ்வின் போது களத்தில் இருந்த உஸ்மான் கவாஜா, கள நடுவர்கள் கோலி, சாம் கொன்ஸ்டாஸ்ஐ சமாதானப்படுத்தி போட்டியை மீண்டும் தொடர்ந்தனர். பின்னர் கொன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜாவின் பந்தில் விக்கெட்டை இழந்தார்.
விளையாட தடை?
விறுவிறுப்பாக நடைபெற்றக் கொண்டிருந்த போட்டியின் இடையே விராட் கோலியின் செயல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் போட்டியின் இடையே விரும்பத்தகாத நிகழ்வில் ஈடுபட்டதாக விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோலியின் சம்பளத்தில் 20 விழுக்காட்டை அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. விராட் கோலியின் நடவடிக்கைக்கு அவர் அடுத்த போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது அபராதத்துடன் கோலி தப்பியுள்ளார்.
முதல் நாளின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணி அதிரடியை வெளிப்படுத்திய நிலையில் பின்னர் நிதான ஆட்டத்தைக் கடைபிடித்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனம் களத்தில் உள்ளனர்.