Kohli Vs Konstas: அறிமுக நாயகனுடன் மல்லுகட்டிய கோலி: சிட்னி டெஸ்டில் கோலி விளையாடுவதில் சிக்கல்?
Boxing Day Test 2024: விராட் கோலிக்கும் சாம் கான்ஸ்டாஸுக்கும் இடையே மைதானத்தில் நடந்த வாக்குவாதத்தால் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கோலி மீது நடடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
Virat Kohli Vs Sam Konstas: இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024 இல் இதுவரை இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. தற்போது மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணித் தலைவர் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் அமர்விலேயே சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலியும், ஆஸ்திரேலிய வீரர் சாம் கோஸ்டாஸும் (sam konstas) ஆவர். முதல் நாள் முதல் இன்னிங்ஸின் 10வது ஓவரில் நிறைய காட்சிகள் அரங்கேறின. அறிமுகப் போட்டியில் விளையாடும் சாம் கான்ஸ்டாஸை கோலி மைதானத்தில் தோள்பட்டையில் இடித்தார். அப்போது ஓவர் முடிந்ததும் வீரர்கள் தங்கள் இடங்களை மாற்றிக் கொண்டிருந்தனர். விராட் தோளில் இடித்த பிறகு, இளம் வீரரும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் ஏதோ சொன்னார். அதன் பிறகு கோலி மீண்டும் அவரிடம் வந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், அங்கு இருந்த உஸ்மான் கவாஜாவும் ஆன்-ஃபீல்ட் நடுவர்களும் இருவரையும் சமாதானப்படுத்தி பிரச்சினையைத் தணித்தனர்.
வீரர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
போட்டியின் போது இருவருக்கும் இடையே நடந்த இந்த நடத்தை காரணமாக, ஐசிசி இப்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். விராட் கோலியும், சாம் கான்ஸ்டாஸும் செய்த செயல் ஐசிசி நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறப்படுகிறது. வீரர் மீது நடவடிக்கை எடுக்க ஆன்-ஃபீல்ட் நடுவர் முன்வந்து வீரர்கள் பற்றிய அறிக்கையை பதிவு செய்ய வேண்டும். ஒரு வீரர் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நடுவர் கருதினால், அவர் மீது அறிக்கை தாக்கல் செய்யலாம். மைதானத்தில் இருக்கும் நடுவரின் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு, போட்டி நடுவர் இது குறித்து முடிவெடுப்பார்.
இருவரும் நடத்தை விதிமுறைகளை மீறினார்களா?
விராட் கோலி வேண்டுமென்றே ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரை தோளில் இடித்திருந்தால், போட்டி நடுவர் அவர் மீது நடத்தை விதிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கலாம். அவ்வளவுதான் அல்ல, சாம் கான்ஸ்டாஸுக்கும் இந்த விவகாரத்தில் வாக்குவாதம் செய்ததற்காக கடும் தண்டனை கிடைக்கலாம். ஏனென்றால், விராட்டுக்கு எதிராக அவர் சில கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
ஐசிசி விதி என்ன சொல்கிறது?
இதுபோன்ற நடத்தை தொடர்பான விதியைப் பற்றிப் பேசினால், எம்சிசி அதாவது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் சட்டம் 42.1 இன் கீழ், மைதானத்தில் வேறொரு வீரருடன் வேண்டுமென்றே தவறாக நடந்து கொள்வது அல்லது உடல் ரீதியாக தொடர்பு கொள்வது நிலை 2 குற்றமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் 3 அல்லது 4 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்படும். ஒரு வீரருக்கு 3 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டால், அவரது போட்டி ஊதியத்தில் 50 முதல் 100% வரை அபராதம் விதிக்கப்படலாம். கூடுதலாக, 1 சஸ்பென்ஷன் புள்ளியும் வழங்கப்படும். அதே நேரத்தில், 4 டிமெரிட் புள்ளிகளுக்கு 2 சஸ்பென்ஷன்கள் கிடைக்கும்.
சிட்னி டெஸ்டில் இருந்து வெளியேற்றப்படும் கோலி?
இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி இந்த விவகாரத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு நான்கு டிமெரிட் புள்ளிகள் கிடைத்தால், அவர் 1 டெஸ்ட் அல்லது 2 வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படுவார். இதன் பிறகு விராட் கோலி 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக விளையாட மாட்டார்.