1,445 நாட்களுக்கு பிறகு பும்ரா பந்தில் பறந்த சிக்சர்; காட்டடி அடித்த இளம் வீரர்; யார் இந்த சாம் கான்ஸ்டாஸ்?
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் சாம் கான்ஸ்டாஸ் அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசியுள்ளார்.
sam konstas
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்தியா ஆஸ்திரேலியா தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது. இந்நிலையில், 'பாக்சிங் டே டெஸ்ட்' எனப்படும் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இந்த டெஸ்ட் மூலம் 19 வயதான இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களம் கண்டார். அவருடன் உஸ்மான் கவாஜா தொடக்க வீரராக ஆடினார். முதல் ஓவரை பும்ரா வீசிய நிலையில், சற்று தடுமாறிய சாம் கான்ஸ்டாஸ் அதன்பிறகு அதிரடியில் வெளுத்துக் கட்டினார். குறிப்பாக உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளாரன பும்ராவின் பந்தை பவுண்டரியும், சிக்சருமாக விரட்டினார்.
Sam Konstas batting
பும்ரா பந்தை நொறுக்கிய சாம் கான்ஸ்டாஸ்
பும்ரா வீசிய 7வது ஓவரில் 2 பவுண்டரி ஒரு சிக்சர் விளாசிய சாம் கான்ஸ்டாஸ், பும்ராவின் 11வது ஓவரிலும் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் நொறுக்கினார். இதில் ஒரு சிக்சரை அவர் ஸ்கூப் ஷாட் மூலம் அடித்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா 4,483 பந்துகளுக்கு பிறகு இன்று தான் தனது பந்தில் சிக்சர் விட்டுக்கொடுத்துள்ளார். 1,445 நாட்களுக்கு பிறகு பும்ராவின் பந்தில் சிக்சர் பறந்துள்ளது.
இந்த சிக்சரை 19 வயது இளம் வீரர் அடித்து இந்திய வீரர்களை பிரமிக்க வைத்துள்ளார். தனது அறிமுக போட்டியிலேயே அதிரடியாக விளையாடிய சாம் கான்ஸ்டாஸ் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 65 பந்தில் 60 ரன் எடுத்து அவுட்டானார். யாருமே எதிர்பார்க்காத வகையில் பும்ரா உள்பட இந்தியா பவுலர்களை மிரள விட்ட சாம் கான்ஸ்டாஸ் யார்? என்ற பேச்சு இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
Who is the Sam Konstas
யார் இந்த சாம் கான்ஸ்டாஸ்?
19 வயதான சாம் கான்ஸ்டாஸ் ஆஸ்திரேலியா உள்ளூர் கிரிக்கெட்டில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 11 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 3 அரைசதங்களுடன் 718 ரன்கள் குவித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அதிரடி சதம் (97 பந்துகளில் 107 ரன்கள்) நொறுக்கினார். இதேபோல் ஆஸ்திரேலியாவின் டி20 தொடரான பிக் பாஷ் லீக்கில் அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ் 27 பந்தில் 56 ரன்கள் நொறுக்கினார்.
India vs Australia Test
அதிரடி ஆட்டம்
இந்த அதிரடி ஆட்டமே ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளர்களை சாம் கான்ஸ்டாஸ் நோக்கி திரும்பி பார்க்க வைத்தது. இந்த தொடரின் முதல் 3 டெஸ்ட்களில் விளையாடிய நாதன் மெக்ஸ்வீனி ரன்கள் அடிக்கத் தடுமாறினார். இதனால் ஒரு அதிரடி தொடக்க வீரர் ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்பட்டார்.
ஏற்கெனவே பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாம் கான்ஸ்டாஸ் கலக்கியதால் அவர் 4வது டெஸ்ட்டுக்கான அணியில் சேர்க்கப்பட்டார். இப்போது வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியிலேயே தனது திறமையை நிரூபித்து தேர்வுக்கு நியாயம் சேர்த்துள்ளார் சாம் கான்ஸ்டாஸ்.
ஐபிஎல் தொடங்கும் முன்பே CSK.க்கு தொடங்கிய தலைவலி: கான்வே, ரச்சின் ரவீந்திரா விளையாடுவது சந்தேகம்