டீம் இருக்குற நிலைமைக்கு இந்த சோக்கு தேவை தானா குமாரு? பண்ட்ன் ஷாட்டால் கடுப்பான ரசிகர்கள்
பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வரும் நிலையில், ரிஷப் பண்ட்ன் மோசமான ஷாட் குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட் பாக்சிங் டே டெஸ்ட்டாக மெல்போன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் டீசன்ட் ஸ்கோரை பதிவு செய்தனர். குறிப்பாக அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இறுதியில் அந்த அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.
முக்கியமான கட்டத்தில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா தவறான ஷாட்டால் 3 ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தார். இந்திய அணி சார்பில் ஜெஸ்வால் 82 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவில் ஸ்கோர் செய்யவில்லை.
இதனிடையே 3ம் நாள் ஆட்டத்தை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா தொடங்கினர். அணி இக்கட்டான சூழலில் இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பண்ட் மீது சென்றது. ஆனால் அதனை புரிந்து கொள்ளாத ரிஷப் பண்ட் தவறான ஷாட்டை விளையாடி ஆட்டம் இழந்தார். பண்ட்ன் மோசமான ஷாட்டால் கடுப்பான ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
முட்டாள் முட்டாள் முட்டாள்
குறிப்பாக போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், முட்டாள், முட்டாள் என மைக்கிலேயே கத்தினார். தொடர்ந்து அவர் பேசுகையில், அந்த திசையில் இரண்டு ஃபீல்டர்கள் உள்ளார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? அப்படி தெரிந்த பின்னரும் ஏன் அந்த ஷாட்டை முயற்சி செய்தீர்கள்? இந்தியா இருக்கும் சூழலில் இந்த ஷாட்டை நாங்கள் விரும்பவில்லை என்று ஆவேசமாகக் கத்தினார்.
இந்நிலையில் இந்திய அணி காலை 8.45 மணி நிலவரப்படி 7 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் சேர்த்துள்ளது. நித்தீஷ் குமார் ரெட்டி 62 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.